நெட்டிசன்:

சந்திரபாரதி (Chandra Barathi )  அவர்களின் முகநூல் பதிவு:

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அணைகள், தடுப்பணைகள், ஊருணீகள், ஏரி, குளங்கள், நீர் சுழற்சிக் குட்டைகள், தாங்கல்கள் என பல நீர் மேலாண்மைத் திட்டங்கள் நடை பெற்றன. சென்னையில் கிட்டத்தட்ட 300 நீராதார இடங்கள் இருந்தன. திராவிட ஆட்சியில், நுங்கம்பாக்கம் ஏரி, வள்ளுவர் கோட்டமானது, அல்லிக் குளம் நேரு உள் விளையாட்டரங்கம் ஆனது, குதிரை லாயம் ஏரி ( சேத்துப்பட்டிலிருந்து சைதை வரை பரந்திருந்ததாகக் கேள்வி) குறுகி சேத்துப்பட்டு ஏரியானது, கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு ஏரியை விழுங்கி பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது, முகப்பேர் ஏரி முற்றிலும் தூர்க்கப்பட்டு இன்று கட்டடக் காடாய் உள்ளது.

தலை நகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலை தான். விவசாயத்திற்கு ஆயக்கட்டுகள், வாய்க்கால்கள் அமைத்து முறைப்படுத்தி மூன்ரு போக விளச்சலுக்கு வழி வகை செய்யும் நீர் மேலாண்மையோடு இருந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். காங்கிரஸ் ஆண்ட காலத்தில் ஏரிகளோ குளங்களோ மற்ற பிற நீராதாரங்களோ கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, ” அண்ணா நகர், கலைஞர் நகர், எம் ஜி ஆர் நகரென ” உரு மாறவில்லை. விளைநிலங்கள் அடித்துப் பிடுங்கப்பட்டு கட்சியினரால் “பிளாட்” போட்டு விற்கப்படவில்லை.

திராவிட ஆட்சி முதல்வர்கள்

வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரத்திற்காக அனல், புனல் மின் நிலையங்கள், மத்திய அரசு திட்டங்களாக துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடியில் கனரக போர் டாங்கிகள் தொழிற்சாலை, கல்பாக்கத்தில் அணு உலை போன்ற திட்டங்களும், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம், சேலத்தில் இரும்பு போன்ற கனிமங்கள் எடுக்கத் திட்டம், உருக்காலைகள் என பல அரசு திட்டங்களைக் கொண்டு வந்ததோடு, சிரு குறு தொழிற்சாலைகள் உருவாக காங்கிரஸ் தலைவர்கள் முன் முயற்சி எடுத்துக் கொண்டனர். இந் நிறுவனங்களை காங்கிரஸ் தலைவர்களோ, அவர்களது பினாமிகளோ நிறுவவோ, நிர்வாகம் பண்ணவோ இல்லை.

வாகன உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்திக்கான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதும் அக்காலத்திலேதான். திராவிட ஆட்சியில், இத் துறையில் சுணக்கம் ஏற்பட்டு பல வாகன பாகங்கள் தொஈற்சாலைகள் வடக்கு நோக்கி நகர்ந்ததும் அமைக்கப்பட்டதும் நடந்தது. மாநில சுயாட்சி பேசும் திராவிட அரசுகள் உரிய அழுத்தத்தைக் மத்திய அரசு தொழில் கொள்கைகளில் கொடுக்காததாலும் இந்த இழப்பு நேர்ந்தது என்றால் மிகையாகாது.

ஸ்டாண்டர்ட் மோட்டார் கம்பெனி, மாருதி வாகனக்களுக்கு இணையான தரத்திலும், விலையிலும் வாகனக்களை தயாரிக்கத் தயாராக இருந்தும், ஆளும் திராவிடக் கட்சியினரோடு ஒத்துப் போகாததால் மூடு விழா நடத்தியது ஊரரியும். பிற்காலத்தில் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு மிகுந்த சலுகைகளை வாரியிரைத்து ( நிலச்சலுகையிலிருந்து- வரிச்சலுகை முடிய) வாகன உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டு வந்து மார் தட்டிக் கொண்டது திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்.

கடைக்கோடிக் குப்பனும் சுப்பனும் கல்வி கற்க வேண்டும் என்று இலவசக் கல்வித் திட்டத்தையும், பசியின்றி படிக்க இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார் கர்ம வீரர் காமராஜர். ஆனால், திராவிடக் கட்சிகள் கல்வியை வியாபாரமாக்கியது. கட்சியின் வட்டம், மாவட்டம், அமைச்சர் எனப் பலரும் தீடிர் கல்வித் தந்தையாகினர். கல்வியை விற்று கல்லா கட்டினர். இதற்கும் அவர்கள் கை வைத்தது விவசாயின் மடியில் தான்.

ஆம், இவர்களது கல்வி வியாபார “மால்” களுக்குத் தேவையான நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி, ஆக்கிரமித்து வாழ்வாதாரத்தைப் பாதித்தவர்களில் பலர் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான். அதுமட்டுமல்ல, உயர் கல்வியை உயர் தரத்தில் தருவதாகச் சொல்லி விவசாயி மகன் பொறியாளராக, மருத்துவராக அவனது வாழ்வாதாரமான விளை நிலங்களை விற்க வைத்த பெருமை திராவிடக் கட்சியினரைத் தான் சேரும் என்றால் மிகையாகாது.

இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்து தமிழ் மக்களின் தமிழ் உணர்வைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்களின் பேரன்களும் பேத்திகளும் இந்தி கற்றார்கள், அதுவே அரசியலில் பதவி கிடைக்கவும் முக்கிய தகுதியாய் சொன்னார்கள். ஆனால் இவர்களின் வார்த்தையை வேதமெனக் கொண்ட மூன்ரு தலைமுறை ஒரு மொழியைக் கற்க அனுமதி மறுக்கப்பட்டு கிணற்றுத் தவளைகளானார்கள்.

சமூக நீதி பற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் இன்றைக்கும் தேட வேண்டியுள்ளது. சமத்துவபுரங்கள் அமைத்து விட்டதால் சமூக நீதி அடைந்து விட்டதாக எண்ணினார்கள் போலும். இதிலும் லஞ்சம் தலைவிரித்தாடியது என்ரு சொல்லவும் வேண்டுமோ. இட ஒதுக்கீடுகளில் இன்னமும் தாவா இருந்து கொண்டு தானிருக்கிறது. காலியிடங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஒதுக்கீட்ட்டில் இடமென்றாலும், பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தவர்கள் இவர்கள். சாதி மறுப்பு திருமணங்களால் சாதியே இல்லாத சமூகத்தைக் கட்டமைப்போம் என்றவர்களின் ஆட்சிகளில் தான் ஆனவக் கொலைகள் தொடர்ந்து நடக்கிறது. பெண் உரிமை பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் பெண் அரசியல் தலைவர்களை விமர்சித்த விதம் நாடறியும்.

காமராஜர் – கக்கன்

திராவிடக் கட்சிகளில் ஒரு கட்சி கொண்டு வந்த திட்டத்தை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும் போது கிடப்பில் போடுவது வழக்கம். இதனால் மக்கள் வரிப் பணத்தில் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு கணக்கேயில்லை. எந்த திட்டத்தையும் திட்ட மதிப்பிற்குள்ளோ, திட்டமிட்ட காலத்திற்குள்ளோ இவர்கள் நடத்தியதாக சரித்திரமில்லை. இவையேல்லாவற்றையும் மீறி, இவர்களது ஆட்சியில் சாலைகள், பாலங்கள் இதர பிற உள்கட்டமைப்புகள் உருவாகியதென்றால் அதற்குக் காரணம் அதில் கிடைத்த “கையூட்டுத் தொகைகளும், கமிஷன்களுமே” யன்றி மக்கள் நலம் அல்ல. குடிநீர் திட்டமானலும் சுகாதாரக்கட்டமைப்புகளானாலும் கமிஷன் இன்றி அணுவும் அசையாது என்ற நிலையைக் கொண்டு வந்த பெருமை இவர்களையேச் சாரும்.

திராவிடக் கட்சிகள் உயர்ந்த சிந்தனைகளை கொள்கைகளாக வைத்தாலும், நடை முறைபடுத்துவதில் அவர்களிடம் உண்மையில்லை. மேட்டையும் பள்ளத்தையும் சமதளமாக்க, மேட்டைக் கரைத்து பள்ளத்தின் அளவிற்கு கொண்டு வருவது என்ற அணுகுமுறையையே கடை பிடித்து வருகின்றனர். மக்களின் எதிர் பார்ப்போ பள்ளம் மேடாக வேண்டும் என்பதே. திராவிடக் கட்சிகளின் சாதனை என்றால், கட்சியின் தலைமையோடு இணக்கமாக, நெருக்கமாக இருந்த சாமன்யனை மட்டும் கோடீஸ்வரர்களாக்கியதும், கட்சித் தலைமையும் குடும்பமும் மகா கோடீஸ்வரகளானதுதான்.

வளமும் வளர்ச்சியும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது. கக்கனும் காமராஜரும் தலைவர்களாக இருந்தனர். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், லஞ்சமும் மோசடியும் நிறுவனமாய் தலைவிரித்தாடுகின்றன. குடும்ப அரசியலும் சந்தர்ப்பவாதிகளும் தலைவர்களாய் உள்ளனர்.

மொத்தத்தில், தமிழன், 1967 இல் தமிழ மக்கள் சரித்திரப் பிழை செய்து விட்டார்கள். அதன் பொன் விழா ஆண்டு இது…!