சென்னை:
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதே நேரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலிதான் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. திருத்தணியில் 107.6 டிகிரி வெயிலின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
இந்நிலையில் புனே வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கோடை மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளார்.
மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.
இதற்கிடையில் இந்திய வானிலை மையம் சார்பில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.