டில்லி:

குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், குட்கா வழக்கில் தமிழக அரசு சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திருட்டுத்தனமாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்கு லஞ்சம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது, பல முறை விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும், அதுகுறித்து உயர்நீதி மன்ற விசாரணையின்போது, நீதிபதிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து, தமிழ அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும்கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 1ந்தேதி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்  சிபிஐ விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்று கூறிய நிலையில், திமுகவின் கேவியட் மனு பல்வேறு யூகங்களை கிளப்பியது.

இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் (குற்றம் சாட்டப்பட்டவர்)  மேல் முறையீடு செய்துள்ளார்.  இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.