என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால்

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தன்னை முன் மொழிந்தவர்களில் இருவரை காணவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுபவர்களை அத் தொகுதியைச் சாரந்த பத்து பேர் முன்மொழிய வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலும் அப்படி பத்து பேர் கையெழுத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆனால் அதில் உள்ளது தங்களது கையெழுத்து இல்லை என்று தீபன், சுமதி ஆகிய இருவர் கூற, பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தது.

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். பிறகு அவரது வேட்புமனு ஏற்கபட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்ததாக விஷால் அறிவித்தார்.  ஆனால் மீண்டும், விஷால் மனு ஆய்வு செய்யப்பட்டதாகவும் உரிய தகவல்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் மிரட்டப்பட்ட இருவர் இன்று மதியம் மூன்று மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் விஷால் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாக விஷால் இன்று காலை தெரிவித்தார்.

இந்த நிலையில், தன்னை முன்மொழிந்தவர்களில்  குறிப்பிட்ட அந்த இருவரை காணவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The persons proposed me is missing : vishal