சென்னை: சமூகநீதி ஒரே நாளில் கிடைத்தது அல்ல, வியர்வை, ரத்தம் என பல்வேறு போராட்டங்களால் கிடைத்தது என ஓபிசி கருத்தரங்களில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பல்வேறு தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் சமீபத்தில்  உச்சநீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  27% இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2,544 பேர் மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பான வழக்குகளை தொடுத்த திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையவழியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,  அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூகநீதி. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 37 சதவீதமாக அதிகரித்தது திமுக தான். மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது திமுக தான்”.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மண்டல் கமிஷன் தீர்ப்பிற்கு பிறகு,  இந்திய சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள  மிக முக்கிய வெற்றி.  திமுக தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி . அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி சமவாய்ப்பு அனைத்தும் , ஓரணியில் அணிவகுத்து நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு துணை நிற்கும்”.

மேலும்,  “சமூகநீதியை நோக்கிய பாதை ஒரு நாளில் உருவாக்கப்பட்டதல்ல, பல தசாப்தங்களாக, டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் , சர். ப.தியாகராயர், ஏ.டி.பன்னீர்செல்வம், பனகல் அரசர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டில் கலைஞர் மற்றும் ஜோதிராவ் பூலே, இந்தியாவில் அம்பேத்கர், வி.பி.சிங். போன்றவர்களின் வியர்வை மற்றும் இரத்தத்தால் சிரத்தையுடன் அமைக்கப்பட்டது.

இந்தப் பாரம்பரியம்தான், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வியில் தங்களுக்கு உரிய இடங்களை மீட்டெடுக்க, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் போராட்டத்தை தி.மு.க.வை எடுக்க வைத்தது.

இதையொட்டி, சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சதவீதம் மாநிலங்கள் முழுவதும் மாறுபடலாம். ஆனால் சமூக நீதிக்கான கருத்தும் தேவையும் ஒன்றே.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி விரைவில் தொடங்கப்படும். #இடஒதுக்கீடு நமது உரிமை என்று ஒன்று சேர்ந்து முழங்குவோம்”

இவ்வாறு கூறியுள்ளார்.