பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால், “இது என் கதை. காப்பி அடித்துவிட்டார்கள்” என்கிற சர்ச்சை கிளம்புவது சகஜம்தான்.
ஆனால் விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கெட்ச் படத்துக்கு இன்னும் அழுத்தமாக “காப்பி” முத்திரை விழுந்திருக்கிறது.
“2015ம் வருடம் நான் எடுத்த ஸ்கெட்ச் என்ற குறும்பட படத்தின் பெயரைக்கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்து விக்ரமை வைத்து எடுத்து வெளியிட்டுவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார் குறும்பட இயக்குநர் சாய் பிள்ளை.
“அட.. படத்தின் பெயரைக்கூடவா” என்ற ஆச்சரியத்தில் சாய் பிள்ளையை தொடர்புகொண்டோம்.
அவர் patrikai.com இதழிடம் தெரிவித்ததாவது:
“2015ம் வருடம் முருகா அசோக் குமாரை வைத்து ஸ்கெட்ச் என்கிற 25 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இயக்கி யூடியூப்பிலும் வெளியிட்டேன். பைனான்ஸியர்களிடம் சரியாக ட்யூ கட்டாதவர்களின் கார்களை தூக்கி வரும் வேலை பார்க்கும் நாயகனின் கதை தான் எனது ஸ்கெட்ச் குறும்படம்.
அதை அப்படியே வைத்து.. பெயரைக்கூட மாற்றாமல் திரைப் படமாக எடுத்துவிட்டார் இயக்குநர் விஜய் சந்தர்.
ஸ்கெட்ச் என்பதன் டிசைன்கூட பெரும்பாலும் அப்படியே இருக்கிறது.
“ஸ்கெட்சுக்கே ஸ்கெட்சா” என்ற டயலாக்கையும் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
திரைப்படத்தில் வரும் சேட்டா கேரக்டர்தான் என் குறும்படத்தில் போன் வாய்ஸ் ஆக வரும். பெரியதிரையில் ஸ்கெட்ச் விக்ரம் கேரக்டர் என்பது எனது குறும்படத்தில் வரும் காசி என்கிற கேரக்டர்தான்.
இது குறித்து, ஸ்கெட்ச் திரைப்பட இயக்குநர் விஜய் சந்தரிடம் கேட்டேன். அவர், “இது உங்கள் குறும்படத்தின் கதை என்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருந்ததைப் பார்த்தேன்” என்றார்.
“எனது குறும்படம் போல் அப்படியே உங்கள் திரைப்படம் இருக்கிறது” என்றேன்.
“நீங்கள் எந்த வருடம் குறும்படத்தை எடுத்தீர்கள்” என்றார்.
“2015ம் வருடம் எடுத்து அப்போதே யூ டியூபில் பதிந்துவிட்டேன்” என்றேன்.
“இது கோ இன்சிடண்ட்தான் மற்றபடி நான் உங்கள் குறும்படத்தைப் பார்க்கவே இல்லை” என்றார்.
“டைட்டில்.. டைட்டில் டிசைன் இன்ட்ரவல் ப்ளாக் எல்லாம் அப்படியே இருக்கிறது” என்றேன்
அதற்கும் அவர், “கோஇன்சிடண்ட்தான்…” என்று சொல்லிவிட்டார்.
கலைத்துறைக்கு வருவதற்குக் காரணமே, பணம் அல்ல. கலைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதும் நமக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதும்தான். இதை சக படைப்பாளியான விஜய்சந்தர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தார் சாய் பிள்ளை.
ஸ்கெட்ச் திரைப்பட இயக்குநர் விஜய் சந்தரிடம் பேசினோம்.
அவர், “நான் 2012ம் வருடம் முதல் படமான வாலுவை எடுத்தேன். ஸ்கெட்ச் இரண்டாவது படம். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை ஏழு வருடங்களுக்கு முன்பே உருவாக்கினேன்.
படத்தின் அடிநாதமே, குழந்தைகள் கல்வி என்பதுதான். இதை விருதுகளுக்கும் அனுப்ப இருக்கிறோம்.
நான் அந்த குறும்படத்தைப் பார்க்கவே இல்லை. தலைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது.. கதைக்களம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதெல்லாம் பெரிய விசயம் அல்ல. படத்தின் அடிநாதம் காட்சிகள் எப்படி இருக்கின்றன என்பதுதான் முக்கியம். நிச்சயமாக அவை வேறு எந்தப் படம் போலவும் என் படத்தில் இருக்காது” என்றார் விஜய்சந்தர்.
சாய்பிள்ளை இயக்கிய ஸ்கெட்ச் குறும்படம்:
https://www.youtube.com/watch?v=tNH2plcwvW8&feature=youtu.be