சென்னை,

பொங்கல் விடுமுறையையொட்டி, அதிக கட்டணங்கள் வசூலித்ததாக 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட தாகவும், மேலும் விதிமீறி இயக்கப்பட்ட104 வாகனங்களுக்கு அபராதம் விதித்த வகையில்  ரூ.2.10 லட்சம் வசூல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில் போக்கு வரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, பேருந்து முன்பதிவு நடக்காத நிலையிலும், பேருந்துகள் இயக்கம் நடைபெறுமா என்று கேள்விக்குறியான நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் தனியார் பேருந்து களை நாடிச்சென்றனர். இதன் காரணமாக அவர்கள் பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலித்தனர்.

இதுகுறித்து புகார் வந்ததை தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க போக்கு வரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்த  3 நாட்கள்  நடைபெற்ற சோதனையின்போது, பயணிகள் அளித்த புகார் காரணமாக,  அதிக கட்டணம்  வசூலித்த 8 தனியார் ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும்,  80 தனியார்  பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மேலும் விதிமீறி இயக்கப்பட்ட104 வாகனங்களுக்கு அபராதம் விதித்த வகையில்  ரூ.2.10 லட்சம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.