The one and only, evergreen MSV..

நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

ப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே, அது மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்குத்தான் பொருந்தும். இசையை கொடுப்பது என்பது எவ்வளவு கடினம் தெரியுமா என்றெல்லாம் சொல்லி, அவர் எப்போதுமே தன்னை வருத்திக்கொண்டதில்லை. சார்ந்தவர்களையும் வருத்தியதில்லை.
நடிகர் திலகம் நடித்து 1964ல் வெளியான பிரமாண்ட தயாரிப்பானது கர்ணன் திரைப்படம். பெரியதும் சிறியதும் என படத்தில் மொத்தம் 17 பாடல்கள். டிகே ராமமூர்த்தியோடு சேர்ந்து இசையமைக்க எம்எஸ்வி பல நாட்கள் எடுத்துக்கொள்வார் என்று படத்தின் இயக்குர் கம் தயாரிப்பாளர் பிஆர் பந்துலு எதிர்பார்த்தார். ஆனால் மூன்றே நாட்களில் பதினேழு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்தார் எம்எஸ்வி. அதுவும் எப்படி? இந்துஸ்தான் மற்றும் கர்நாடக சங்கீதங்களை வைத்து. விதவிதமான ராகங்களிலிருந்து. இசையை கரைத்து குடித்த மேதாவிகளே கர்ணன் பட பாடல்களை கேட்டு பிரமித்துபோனார்கள்.
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..” என்று கேட்டவர்களெல்லாம் உருகுகிற பாடலை கொடுத்துவிட்டு,
“ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை” என்று எம்ஜிஆருக்கு துள்ளலாக மெட்டுபோட போய்விடுவார் எம்எஸ்வி..
எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அவர் பற்றிய விஷயங்களில் வியப்பே மேலோங்கும். அவர் கரங்கள் சினிமாவுக்காக மெட்டுக்களை கட்டியபோது இன்றைய ரஜினியும் கமலும் பிறக்கவேயில்லை.. பின்னாளில் அவர்கள் பிறந்து ஸ்டார்களாகிய பிறகு அவர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்தார். அந்த அளவுக்கு எம்எஸ்வியின் உழைப்பும் சவாலும் அலாதியானது.
1978 டிசம்பர் இறுதியில், ரஜினியின் ப்ரியா படம் முதல் ஸ்டீரியோ இசையுடன் வெளியாகி, இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் சக்கை போடுகின்றன.
காஞ்சிபுரம் கண்ணன் டாக்கீசில் முதன் முறையாக பார்த்தபோது நமக்கு பிரமிப்பாக இருந்தது.
வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்ட படத்தின் பாடல்கள் என்றால் நமக்கு உலகம் சுற்றும் வாலிபன்தான்.
அடுத்த சில மாதங்களில், கமல் ரஜினி இணைந்து நடித்து எம்எஸ்வி இசையமைத்த,’ நினைத்தாலே இனிக்கும்’ வெளியாகிறது.
காஞ்சிபுரம் ராஜா டாக்கீசில் நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ். இன்றும் நன்றாக நினைவிருக்கிறது படம் பார்த்த பலரும் எப்ப பாத்தாலும் பாட்டு பாடிகிட்டே இருக்காங்க என்று அலுத்து கொண்டார்கள். ஆனால் தியேட்டர்களுக்கு வெளியே எங்கே பார்த்தாலும் நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தான்.
தியாகராஜ பாகவதர் காலத்தில் இசையமைக்க ஆரம்பித்த எம்எஸ்வி, முப்பதாண்டுகளுக்கும் பிறகும் அன்றைய தலைமுறை ரசனைக்கேற்ப, ‘’எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’’ என இளமையை அள்ளித்தெளிக்கிறார்.
சம்போ சிவ சம்போ என்று ரஜினிக்காக பாடி, நினைத்தாலே இனிக்க வைக்கிறார்.
“மை நேம் பில்லா வாழ்க்கை எல்லாம்” பாடவைத்து என பில்லா படம் மூலம் முன்னணி நடிகர் ரஜினியை வசூல் ரஜினியாக மாற்றியதில் பெரும் வகிக்கிறார்.
அவ்வளவு ஏன் இன்றைய சில நூறு கோடி ஹீரோ ரஜினிக்கு திரையில் பாட்டுக்காக குரல் கொடுத்தது எம்எஸ்வி தான். மூன்று முடிச்சு படத்தில், வசந்த கால நதிகளிலே பாடலின் கிளைமாக்ஸை எம்எஸ்வி குரலில் தான் ரஜினி முடிப்பார். தென்னிந்திய திரைவானில் மின்னிய எந்த கலைஞனையும் எம்எஸ்வி என்ற புள்ளியோடு நேர்க்கோட்டில் இணைந்து விடமுடியும். அந்த அளவுக்கு நீண்ட நெடிய பயணத்துக்கு சொந்தக்காரர் அவர்..
எம்எஸ்வி என்றால் எம்ஜிஆர் சிவாஜி பாடல்கள்தான் அனைவருக்குமே முதலில் ஞாபகம் வரும். அதிலும் எம்ஜிஆரின் அரசியலுக்கு வழி வகுத்த கொள்கை பாடல்கள் பலவற்றிற்கும் இசையமைத்தவர் எம்எஸ்விதான்.
திமுகவில் கலந்த எம்ஜிஆர் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு திரைமூலம் சாட்டையை சுழற்றியபோது, ‘’அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்’’ குலேபகாவலி (1955) படத்தில் ஆரம்பித்து வைத்த எம்எஸ்வி,
‘’கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்’’’ என்று பாட்டைபோட்டு எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978) வரை கொள்கை பாடல்களை அள்ளிக்கொடுத்தபடியே இருந்தார்.
அதற்கு இடையில்தான்,
அச்சம் என்பது மடமையடா,
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்,
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..
-என எத்தனையெத்தனை பொக்கிஷங்கள்! இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும்.
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல,
சட்டி சுட்டதடா கைவிட்டதடா,
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
பனி இல்லாத மார்கழியா,
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி,
காற்றுவாங்க போனன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்,
பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தால்,
அழகிய தமிழ்மகள் இவள்,
ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா,
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்,
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்,
நான் பாடிக்கொண்டே இருப்பேன் நீ பக்கத்தில் இருக்கும்வரை…
டிகே ராமமூர்த்தியோடு சேர்ந்தும் சரி,தனியாகவும் சரி, எம்எஸ்வி தந்த காலத்தால் அழியாத இசைக்காவியங்கள் நூற்றுக்கணக்கானவை
ஆனால் வினோதம் என்னவென்றால், இந்திய அளவில் திரை இசை மேதைகள் நிறையபேர் இருந்தாலும் மெல்லிய நிஜ அரசியலை சார்ந்தும் எம்எஸ்வி பயணம் செய்ததுபோல் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
திமுக மற்றும் அதிமுகவுக்காக எம்ஜிஆருக்கும், காங்கிரசுக்காக சிவாஜிக்கும் என அரசியல் கலந்த பாடல்களுக்கு அதிரவைக்கும் மெட்டுக்களை போட்டுத்தந்தவர் எம்எஸ்வி.
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” பாடலாகட்டும்,
“நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே” பாடலாகட்டும், சிவாஜி பாடியதின் பின்னணி அரசியல், எத்தனை பேருக்கு தெரியும்?
அத்தனை அரசியல்வாதி களையும் போட்டு வெளுத்ததால் ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்த சோவின் முகமது பின் துக்ளக் படத்திற்கு இசை எம்எஸ்விதானே..?
ஆனால் யாருமே எம்எஸ்வியை கடிந்துகொண்டதில்லை.
காரணம், எல்லோர் அரசியல் பார்வைக்கும் பாரபட்சமில்லாமல், தவிர்க்கும் மனநிலை இல்லாமல் இசையமைத்து கொடுத்தவர் அவர்.
பள்ளிகளில் இன்று பாடப்படுகிற தமிழ்த்தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள் பேரில் இசை வடிவம் கொடுத்தவரும் அவரே.
இன்றைக்கு ஒரு எம்எல்ஏவை கொஞ்சம் தெரிந்துவைத்துக் கொண்டாலே ஒருவன் ஆடுகிற ஆட்டம் சொல்லித் தெரியவேண்டியதில்லை
ஆனால் எம்எஸ்வியின் வாழ்க்கை ஆறு முதலமைச்சர்களை ஆரம்ப புள்ளியில் இருந்து பழகிய வரலாற்று பெருமை கொண்டது. அதே நேரத்தில் அடக்கமாகவே இருந்தார் என்பதுதான் அதைவிட பெருமை.
வேலைக்காரி படத்தில் குருநாதர் சிஆர் சுப்பாராமனோடு எம்எஸ்வி பணியாற்றினார். படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணா, படத்தின் நாயகி விஎன் ஜானகி.
டிகே ராமமூர்த்தியை விட்டு பிரியும் முன் எம்எஸ்வி கடைசியாக பணியாற்றிய படம் ஆயிரத்தில் ஒருவன். இதில்தான் எம்ஜிஆருடன் ஜெயலலிதா முதன்முறையாக இணைகிறார்.
டிகை ஜெயலலிதாவை பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடவைத்தவர் எம்எஸ்விதான். சூரியகாந்தி, அன்பைத்தேடி, வைரம், உன்னைச்சுற்றும் உலகம் போன்ற படங்களில் ஜெயலலிதா பாடிய பாடல்கள் அத்தனையும் ஹிட் அடித்தவை. எம்எஸ்வியின் இசை என்றால் ஜெயலலிதாவுக்கு உயிர். அதனால்தான் முதலமைச்சராக இருந்தபோது திரை உலகையே கூட்டி எம்எஸ்விக்கு பிரமாண்டமான பாராட்டு விழா எடுத்தார் ஜெயலலிதா.
இப்படிப்பட்ட விஸ்வநாதன் என்ற மனிதன் எப்படி விஸ்வரூபம் எடுத்தான்? என்பதை ஆரம்பபுள்ளிக்கு சென்று பார்ப்போம்.
தற்கொலை முடிவில் மகனை முதலில் குளத்தில் தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று நினைத்தார் தாயார்.. அப்போது சிறுவனான மகன், தள்ளிவிட முயன்ற தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி நீ குதிக்கலைன்னா?’’ – இப்படி கேட்டு உயிர்பிழைத்த சிறுவன்தான், கோடானு கோடி மக்களின் காதுகளில் இன்றைக்கும் அமிர்தமாக பாய்ந்துகொண்டிருக்கும் எம்எஸ்விஸ்வநாதன் அவரின் பாடல்களை கேட்க மேதாவித்தனமெல்லாம் தேவையில்லை..
பாவமன்னிப்பு படத்தின்,” எல்லோரும் கொண்டாடு வோம் அல்லாவின் பேரை சொல்லி..” பாடலை, ஒரு சாமான்யன்கூட சாப்பாட்டுத்தட்டை தட்டியபடியே நேர்த்தியாக இசையை கோர்த்துவிடமுடியும்.. இவ்வளவு வெகுஜன ஈர்ப்பு இசையில் இருந்ததற்கு காரணம், எம்எஸ்வி என்ற மனிதன் வாழ்வில், கடைசி உயிர் மூச்சுவரை கூடவே இருந்த பாமரத்த னமும், கள்ளம் கபடமில்லா குழந்தைத்தனமும் தான்.
1930களில் சிறுவனாக இருந்தவருக்கு நடிப்பும் இசையுமே மிகப்பெரிய வாழ்க்கை லட்சியமாக துடித்துக்கொண்டிருந்தது. இதற்காக பல இடங்களில் எடுபிடி செய்யவும் அவர் தயங்கியதே இல்லை.. 1940களில் சினிமாவில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தாலும், அவையெல்லாம் மின்னல் வேகத்தில் கடக்கும் வேதனையான தோன்றல்களே.. சிறுவன் எம்எஸ்விக்கு விநாயகர் வேடத்தை கொடுத்து தலையில் யானை முகமூடியை மாட்டவைத்து முகத்தை காட்டமுடியாமல் செய்துவிட்ட சோக வரலாறெல்லாம் உண்டு. இதனால்தான் என்னவோ ஏதோ ஒரு தருணத்தில், நடிப்பை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு ஆர்மோனியம் மூலம் இசையை உரசிப்பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது.
இன்றைக்கு ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் எப்படி ஒரு காலத்தில் சின்ன சின்ன இசைக் குழுக்களில்லாம் வாசித்து தள்ளினாரோ, அதைப் போல் 1940களில் எம்எஸ்வி வாசிக்காத இசைக் குழுக்களும் இசையமைப்பாளர்களுமே கிடையாது.
எஸ்வி வெங்கட்ராமன். எஸ்எம் சுப்பையா நாயுடு, சிஆர் சுப்பாராமன் என ஒரு பட்டியலே உண்டு. அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம், விஸ்வ நாதன் திறமையான பையன்..நிச்சயம் ஒரு நாள் அவன் கொடி தமிழ்சினிமாவில் பறக்கத்தான் போகிறது என்பதே. ஏனென்றால் உதவியாளர் என்ற முறையில் எம்எஸ்வி போட்ட டியூன்களில் பல தடவை, ஜாம்பவான் இசையமைப்பாளர்களுக்கு பெரும் புகழையும் விளம்பரத்தையும் தேடித்தந்துள்ளது.
என்டிஆர் பானுமதி நடித்து 1953ல் வெளிவந்த சண்டிராணி படம் என்றைக்கும் பேசப்படும் என்றால், அதற்கு முக்கியமான விஷயம், அதில் இடம்பெற்ற ‘’வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே’’ என்ற பாடல். இசை குருநாதர் சிஆர் சுப்பாராமன் பெயரில் இருந்தாலும் டியூன் போட்டது விஸ்வநாதன்தான்.
இந்த பாடல் சாமான்யர்களை கவர்ந்தது பெரிய விஷயமல்ல.. பெரிய பெரிய இசையமைப்பார்களே சொக்கிப்போனார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அதிலும் நம்ம இசைஞானி இளையராஜா, இந்த பாடலின் தீவிர அடிமை.. எம்எஸ்வியோடு பின்னா ளில் இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் , “வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” என்று பாடலுக்கு வேண்டிவிரும்பி மறுவடிவம் கொடுக்கவைத்தவர் இளையராஜா.
குருநாதர் சி.ஆர்.சுப்பராமனிடம் எம்எஸ்வி போட்ட சில டியூன்களின் மகிமை பின்னாளில் எப்போது தெரியவந்தது என்றால், குருநாதர் மறைந்து, நிலுவையில் நின்ற அவரின் படங்களை எம்எஸ்வி இசையமைத்து முடித்துக் கொடுத்தபோது தான்..
தெலுங்கு ஜாம்பவான் நடிகர் நாகேஸ்வர்ராவ் வாழ்வில் எவரெஸ்ட் சிகரம்போல இன்றைக்கும் இருக்கும் தேவதாஸ் பாடல்களும் இப்படித்தான் எம்எஸ்வியால் காவியங்களாக வழங்கப்பட்டன. எம்எஸ்வியின் திறமையை தெரிந்து அவருக்கு முதலில் வாய்ப்பளித்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்.. நடிகர் திலகம் சிவாஜியின் இரண் டாவது படமான பணம்(1952) படத்தை என்எஸ்கே தயாரித்து இயக்கினார்.
இந்த படத்தில் விஸ்வநாதனையும் சிஆர் சுப்பராமனிடம் வயலினிஸ்ட்டாக பணியாற்றிய டி.கே ராமமூர்த்தியையும் இணைத்து இரட்டையரை உருவாக்கினார். இந்த நேரத்தில் ஜெனோவா என்ற படத்திற்கு இசைய மைக்க எம்எஸ்விக்கு வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் படத்தின் ஹீரோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூபிடர் பிக்ஸ்சர்ஸில் ஆபிஸ் பாயாக இருந்தவர் என் படத்துக்கு இசைய மைப்பதா என்று கேள்வி கேட்டார். அவர் வேறு யாருமல்ல சாட்சாத் மக்கள் திலகம் எம்ஜிஆர்தான். இத்தனைக்கும் எம்எஸ்வியின் குருநாதர் சி.ஆர்.சுப்ப ராமனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு சிறிய வரலாறு உண்டு.
1947ல் எம்ஜிஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தாலும் அதன்பின்னர் வெளி வந்த, பைத்தியக்காரன், அபிமன்யு, மோகினி, ராஜமுக்தி, ரத்னகுமார் ஆகிய படங்களில் அவர் இரண்டாவது ஹீரோதான். இவை அனைத்துக் குமே சிஆர் சுப்பராமன்தான் இசை. இந்த காலகட்டங்களில்தான் எம்எஸ்வி என்ற இளைஞர், எம்ஜிஆரின் பார்வையில் ஆபிஸ் பாயாக தெரிந்தி ருக்கிறார். கடைசியில் ஜெனோவா படத்தில் அரை குறையாக எம்ஜிஆர் சம்மதிக்க விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைக்கின்றனர்.
இப்படித்தான் பணம்-ஜெனோவா என ஒரே நேரத்தில் இருபெரும் திலகங்களுடன் எம்எஸ்வியின் பயணம் ஆரம்பமானது.. 1955ல் வெளியான எம்ஜிஆரின் படமான குலேபகாவலி, மாஸ் ஹிட்.. எம்எஸ்வி-ராமமூர்த்தி போட்ட பாடல்கள் அத்தனையும் தியேட்டர்களுக்கு திரும்பத் திரும்ப வரவழைக்கிற ரகமாக அமைந்து போய்விட்டன.. 1956ல் எம்கே.ராதா நடித்த பாசவலையும் விஸ்வ நாதன் ராமமூர்த்தி பாடல்களுக்காகவே தறிகெட்டு ஒடிய படம்..
அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை..’’
‘’ உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா’’
‘’லொள்லொள் லொள்’’ என பத்து பாடல்கள்.
சிவாஜி நடித்த புதையல் படத்தின் ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கையின் ‘’ஆடை கட்டிவந்த நிலவோ’ போன்ற பாடல்கள் 1950களின் இறுதி கட்டத்தை விஸ்வநாதன் ராமமூர்த்தி வசம் ஒப்படைத்துக்கொண்டிருந்தன.
எம்எஸ்வி வாழ்க்கையில் வேகமான ஒட்டத்திற்கு நிரந்தரமாய் களம் அமைத்தவர் இயக்குநர் ஏ.பீம்சிங்… இவரது பதிபக்தி படத்தில் சிவாஜியும் ஜெமினியும் இணைய, இசைக்காக எம்எஸ்வியும் சேர்ந்தார்.
அதன்பிறகு பாகப்பிரிவினை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பச்சை விளக்கு என படங்கள் வரிசையெடுத்தன..
தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்..
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
காலங்களில் அவள் வசந்தம்.. என தமிழ் திரையுலகில் ராமமூர்த்தியோடு சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் கொடுத்தார் எம்எஸ்வி..
இன்னொரு பக்கம் எம்ஜிஆருடன் மன்னாதி மன்னனில், “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று ஜெட் வேகத்தில் விறுவிறுவென மேலே ஏறியது..
1965- ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படம்வரை ராமமூர்த்தியோடு திரையிசையை ஆட்டுவித்தார் எம்எஸ்வி.
இரட்டையர் பிரிந்தபோதுதான், எம்எஸ்வியின் தனித்தன்மை இன்னும் ஒரு படி மேலே தெரியவந்தது. முதன் முதலில் தனித்து இசையமைக்க எம்எஸ்விக்கு வாய்ப்பு கொடுத்தவர் எம்ஜிஆர். அதுதான், கலங்கரை விளக்கம்.
“படத்தில், பொன்னெழில் பூத்தது புது வானில்..”
“காற்றுவாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்..”
என அத்தனை பாடல்களும் எம்எஸ்வி என்ற இசையமைப்பாளர், யார் என்பதை நிரூபித்தன.
சக போட்டியாளர் கேவி மகாதேவனை தாண்டி, 1970களில் வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர்-கணேஷ் இளையராஜா என பலர் தலை எடுக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் எம்எஸ்விஸ்வநாதன் அசால்ட்டாக அவர்கள் அனைவரையும் மிஞ்சி, காலத்துக்கேற்ப தனது இசையையும் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.
ஒரு புறம் எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு இசை…
இன்னொருபுறம் புதிது புதிதாக கூட்டணி. அதிலும் கே.பாலச்சந்தருக்காக கண்ணதாசன் பாடல்களுக்கு எம்எஸ்வி போட்ட இசை, உண்மையிலேயே அது தனி ரகம்.
சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல்நிஜமாகிறது போன்ற படங்களின் பாடல்களை கேட்டால்தான் நாம் சொல்வது புரியவரும்.
இசையமைப்பாளர் என்ற அவதாரத்தை தாண்டி விஸ்வநாதனை, சாதாரண மனிதன் என்று பார்த்தால் அவரின் மனிதநேயம் விசுவாசம் வியப்புக்குரியவை.
மாபெரும் இசை ஜாம்பவான் எஸ் எம் சுப்பையா நாயுடுவை கடைசி காலம்வரை அவ்வளவு அர்ப்பணிப்போடு தன்னுடன் வைத்து பராமரித்தார்.
காலம் செய்த கோலமாய் வாழ்க்கை சிதிலமடைந்து போன சந்திரபாபுவுக்கு கடைசி காலத்தில் பொருளாதாரப் புகலிடமாய் இருந்தவர் எம்எஸ் வி
தென்னிந்திய சினிமாவில் எவ்வளவோ சாதித்து ‘மறைந்தும் மறையாத’ எவர்கிரீன் இமையமைப்பாளர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 97-வது பிறந்தநாள் இன்று.
From the files…