‘அரசியலிலிருந்து விலகியிருப்பது’ என்ற சசிகலாவின் முடிவை அதிமுகவில் உள்ள சிலர் வரவேற்று அறிக்கை விடுவது என்பது இங்கு பேசுபொருளல்ல.
ஆனால், சசிகலாவின் முடிவை வரவேற்று, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சீனிவாசன் போன்றவர்களெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்கள். இங்குதான் நமக்கு இடிக்கிறது.
டெல்டா & தென்மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு இந்த முடிவால் ஆதாயம் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று யாரேனும் விளக்கம் கொடுத்தால், அது ஏற்க முடியாது ஒன்று. ஏனெனில், தினகரன் களத்தில்தான் இருக்கிறார். சசிகலா ஒன்றும் அமமுகவுக்கு வாக்கு கேட்கப் போவதில்லை. அந்தவகையில், அதிமுகவுக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் சேதாரம் ஏற்படுத்தப்போவது தினகரன் கட்சிதான்!
ஆனால், சசிகலாவின் இந்த முடிவை, எதற்காக பாஜக புளங்காகிதம் அடைந்து வரவேற்க வேண்டும்? ஏனெனில், சசிகலாவின் இந்த தற்காலிக முடிவுக்கு, அதிமுகவில் அவர்கள் ஆடிய ஆட்டம் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.
சசிகலாவை உள்ளே விட்டுவிடக்கூடாது என்பது அவர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி வந்தபோது, ஓபிஎஸ் – இபிஎஸ் கைகளைப் பிடித்து, இருபக்கமும் உயர்த்தி காண்பித்தபோதே அந்த விஷயம் பலருக்கும் புலப்பட்டது.
எனவே, தங்களின் திருவிளையாடல்களை சமாளிக்க முடியாத சசிகலா, இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற மகிழ்ச்சியை, மறைக்க முடியாமல் வெளிப்படுத்தி குதூகலிக்கிறார்கள் பாஜக பிரமுகர்களில் சிலர்!