தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Must read

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில்  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.  அங்கு நடைபெற்ற தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டனர். அவருடன் திருவொற்றியூர் எம்எல்ஏ, கே.பி. சங்கர், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  திருவொற்றியூர் பகுதியில் மகப்பேறு மருத்துவத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவமனையை இணைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தேவையான மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில்  தொற்று பரவல் குறைந்து வருகிறது. பாதிப்பை விட குணமடைவோர் வீதம் இரு மடங்கு அதிகரித்து உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கையால், தொற்று குறைந்துள்ளதுடன்,  56,585 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா குறைந்துள்ளதற்கு இதுவே சான்று.

கொரோனா இறப்பு அறிவிப்பு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு விதிமுறை என எதுவும் இல்லை.  கொரோனாவில் தாய், தந்தையை இழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.

மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று ஹைதராபாத், பூனேவிலிருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை வந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article