சென்னை: தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% ஆக உயந்துள்ளது என்றும்,   2022 ஆம் ஆண்டை காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.உறுப்பு தானத்தில் தமிழ்நாடுதான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதும் பெருமைக்குரியது.

உடல் உறுப்பு தானம்‘ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். ஒருவர் தங்களது உடல்  உறுப்புகளை தானம் வழங்குவதற்கு  ஆன்லைன் உறுதிமொழிப் படிவத்தை நிரப்பினால் போதும், உங்களின் தனிப்பட்ட அரசாங்கப் பதிவு எண்ணுடன் கூடிய நன்கொடையாளர் அட்டை கிடைத்து வரும்.
அதன்படி தானம் செய்பவரின் அனைத்து உறுதிமொழிகளும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பில் (NOTTO) பதிவு செய்யப்பட்டுவிடும். பயனர், இந்த கார்டை  எப்பொழுதும்  உடன் வைத்திருப்பது அபசியம். மேலும், தங்களது  விருப்பத்தை (உறுப்பு தானம்) பற்றி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுதுவதும் சிறந்ததது.

இந்தியச் சட்டத்தின்படி, இறந்தவுடன் உங்கள் உறுப்புகளைத் தானம் செய்வதா இல்லையா என்பதை உங்கள் உறவினர்களே முடிவு செய்வார்கள்.  ஆனால், ஒருவர் தனது உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தாலும், அவரின் ரத்தம் சம்பந்தப்பட்ட  குடும்ப  உறவினர்கள் சம்மதம் தெரிவிக்காதவரை தானம் செய்ய முடியாது. எனவே, ஒருவர்  ஒரு உறுப்பு தானம் செய்வதாக உறுதியளிக்கும் போது, ​​உங்கள் குடும்பத்தினருடன் தானம் செய்ய விரும்புவதைப் பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம். தேவை ஏற்படும் பட்சத்தில் உங்கள் குடும்பத்தினர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு இது உதவும்.

இந்த தானத்தின்படி, ஒருவர்  எதிர்பாராத விதமாக இறந்தால், அவரது உடலில் இருந்து அகற்றப்படும் உறுப்புகள், தேவைப்படுவோருக்கு  பொருத்தப்பட்டு, வாழ்வளிக்கப்படுகிறது.  குறிப்பாக  விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால் உறுப்பு தானம் குறித்து  தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசு உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்து கவுரவித்து வருகிறது.

கடந்த ஆண்டு (2023), செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும்   சாலைவிபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இவ்வாறு விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. அதனால் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்திற்கு 6,322பேர், கல்லீரலுக்கு 438பேர், இதயத்திற்கு 76பேர், நுரையீரலுக்கு 64பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 25பேர், கைகளுக்கு 27 பேர், சிறுகுடலுக்கு 2பேர், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு 40பேர் காத்திருக்கின்றனர். இதேபோல் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு 42 பேர், சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு ஒருவர் என்று மொத்தம் 7,037 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில்,  கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.  குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி  மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 5,000 மேற்பட்டோர் உடல்உறுப்பு தானம் செய்வதற்கு பெயர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்பு தானம் அளித்ததால் 1000 பேர் பயனடைந்துள்ளனர். எனவே, உடல் உறுப்பு தானம் அளிக்க பொதுமக்கள் அதிகளவில் முன்வர வேண்டும்” இவ்வாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன்,  http://www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடல் உறுப்பு தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ, அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் மட்டுமே, உடல்உறுப்புகள் தானமாக பெறப்படும் என மருத்துவர்கள் தொரிவித்துள்ளனர்.