சென்னை,
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருப்பதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் லட்சதீவை நோக்கி நகரக் கூடும். எனவும் இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையமும், குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
மேலும், புதியதாக மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்ககடலில், தமிழகம் இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.