வாரணாசி:

காசியில் இறந்தால் பிறப்பு மற்றும் மறுபிறப்புக்கு இடையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதற்காக தங்கள் கடைசி காலத்தில் காசியில் தங்கினால் மோட்சம் அடையலாம் என்ற நம்பிக்கை பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு உள்ளது.

ஆனால், மோட்சம் அடைய வருவோருக்கு மோட்ச மையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களில் இடம் கிடைப்பதில்லை என்ற குறை இருந்து வந்தது.

மோட்ச மையங்களில் தங்க தினமும் ஏராளமான மனுக்கள் தரப்படுகின்றன. அனைவருக்கும் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. பல ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டி இருக்கிறது.

இந்த நிலைமைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காத்திருப்போரின் தேவையை அறிந்து புனிதத்துடன் கூடிய மோட்ச மையத்தை புதிதாக அமைக்க உத்திரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காசி விசுவநாதர் நடைபாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மோட்ச மையங்கள் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாக அதிகாரி விஷால் சிங் கூறும்போது, ” குறிப்பிட்ட மோட்ச மையங்களில் மட்டுமே தம்பதிகளும்,
மரணப்படுக்கையில் இருப்பவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

வாரணாசி என்று அறியப்படும் காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிறப்பு மற்றும் மறுபிறப்புக்கு இடையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது இந்து மத நம்பிக்கை.

புதிதாக அமைய உள்ள மோட்ச இடம் மிகவும் புனிதமான இடமாகும். காசி விசுவநாதர் கோயில் மற்றும் மணிகர்ணிக காட் ஆகிய பகுதிகளுக்கு இடையே அவிமுக்து என்ற இடத்தில் அமையவுள்ளது.

இது மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடமாக அமைகிறது. மருத்துவமனை வசதியுடன் கூடிய புதிய மோட்ச மையத்தில் முதலில் வருவோருக்கு முதல் சேவை என்ற வகையில் அறை ஒதுக்கப்படும்.

இந்த பகுதியில் ஆசிரமம் அமைக்கும் வகையில் ரூ 2.5  கோடிக்கு நிலம் வாங்கப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு வரும் 2021-ம் ஆண்டுக்குள் புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டப்பட்டு வரும் மோட்ச மையங்களில் முதலில் வருவோருக்கு முதல் சேவை என்ற வகையில் 50 பேர் அனுமதிக்கப்படுவர்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரி சமமான அறைகள் இருக்கும். தம்பதிகளும், மரணப்படுக்கையில் இருப்போருக்கும் அறைகள் ஒதுக்கப்படும். இதில் நிபந்தனை ஏதும் விதிக்கப்படாது” என்றார்.

கடந்த 15 ஆண்டுகளாக காசியில் மனைவியுடன் தங்கியிருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த 80 வயது பேராசிரியர் எம் பி சாஸ்திரி கூறும்போது, ” இந்து மத சாஸ்த்திரங்களின் படி காசியில் இறப்பவர்கள் நேரடியாக மோட்சத்துக்கு செல்வதாக கூறப்படுகிறது.

மோட்சம் தேடி வருவோருக்கு காசி ஒரு வரப்பிரசாதமான இடமாகும். இங்குள்ள மோட்ச மையங்களில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது” என்றார்.

40 அறைகள் கொண்ட மோட்ச மையத்தின் மேலாளர் வினோத் குமார் அகர்வால் கூறும் போது, “இந்த மோட்சம் மையம் கடந்த 1920 – ம் ஆண்டு காசி முமுக்சு பவன் சபாவால் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மோட்சம் அடைவதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

பதிதாக கட்டப்பட்டு வரும் மோட்ச மையம் காத்திருப்போருக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

மோட்ச மையங்களில் குறைந்த அளவிலான கட்டணமே விதிக்கப்படுகிறது. இந்த மையங்கள் நன்கொடைகள் பெற்று நடத்தப்பட்டு வருகின்றன.

மாதம் ஒன்றுக்கு தம்பதிகளுக்கு ரூ. 100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். அதேசமயம் காசிலாப் முக்தி பவனில் இலவசம்.

ஓர் இரவு தங்க இங்குள்ள விருந்தினர் இல்லங்களில்  ரூ 350-ம், ஹோட்டல்களில் ரூ1,000-ம் வசூலிக்கின்றனர்.

காசி விஸ்வநாதர் கோயிலின் மூத்த குருக்கள் அமர்நாத் உபாத்தியாயா கூறும்போது, “காசியில் தங்குவது, ஞானம் பெறுவது, கங்கை தீர்த்தம் பருகுவது,சிவனை வழிபடுவதன் மூலம், பிறப்பு மற்றும் மறு பிறப்புக்கிடையே காசி விஸ்வநாதரின் அவதாரமான தர்கேஸ்வரர் விடுதலை அளிப்பார் என்பது ஐதீகம் என்றார்.