பாட்னா: பீகாரின் முஸாஃபர்பூரில் மூளை வீக்க நோயால் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததையடுத்து, முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறது கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதா. ஏனெனில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு, மூளை வீக்க நோயால் 90 குழந்தைகள் இறந்தபோது பாரதீய ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தது. மேலும், முஸாஃபர்பூர் ஆசிரம கற்பழிப்பு வழக்கிலும், நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்தது பாரதீய ஜனதா.

ஆனால், தற்போது அக்கட்சியின் நிலைமை வேறுமாதிரியானது. தனது கட்சியின் அமைச்சரே சுகாதாரத் துறைக்கு பொறுப்பு வகிப்பதால், வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய நிலை. மூத்த பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.தாகூர் மட்டுமே இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மரணம் தொடர்பாக, முஸாஃபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 18ம் தேதி சென்ற முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, அவர் விரைவிலேயே அந்த இடத்தைவிட்டு நீங்க வேண்டியதானது என்பது கவனிக்கத்தக்கது.