புதுடெல்லி: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் தற்போது 8 ஓடுதளங்களுடன் கட்டப்பட்டு வரும் ஜெவார் விமான நிலையம், டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் வரும் 2024ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்மூலம், உலகின் பெரிய விமான நிலையங்களுள் ஒன்றாக இது திகழும் என்றும் கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள ஓ’ஹரே சர்வதேச விமான நிலையத்துடன் இது ஒப்பிடப்படும்.

ஏனெனில், அந்த சிகாகோ விமான நிலையம் தற்போது 7 ஓடுதளங்களுடன், 7200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நொய்டா சர்வதேச விமான நிலைய லிமிடெட்(NIAL), ஜெவார் விமான நிலையத்தின் ஓடுதளங்களை ஆறிலிருந்து எட்டாக அதிகரிக்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விரிவாக்கத்திற்கான நில மதிப்பீட்டை செய்து முடித்த பிறகே, அந்த செயல்திட்டம் உத்திரப்பிரதேச அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. 6 ஓடுதளங்களை 8 என்பதாக அதிகரிக்க வேண்டுமென உத்திரப் பிரதேச முதல்வர் யோகி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிறகே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது.