article-1349679-0CDE63A0000005DC-267_634x385
 மதுரையில்  மக்கள் நலக் கூட்டணி மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. காசு, கட்டிங் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி கூடிய கூட்டம்.
ஆனால், இந்த கட்டுரை அரசயில் குறித்தானது அல்ல.  அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசிய ஒரு விசயம் பற்றி மட்டுமே!
 “தமிழகத்தில் பிரதான கட்சிகளாக உள்ள இரு கட்சிகளில் ஒன்றுகட்டுவிரியன்‘; மற்றொன்றுகண்ணாடிவிரியன்‘. இன்னொரு கட்சிநாகப்பாம்பு‘. இந்த பாம்புகளை அடித்து விரட்டி தமிழகத்தை கோயிலாக்கும் முயற்சியில் எங்கள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் திருமா.
 அவரது ஆவேசத்தையோ, அதில் உள்ள அரசியல் நிலைபாட்டையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை.
 ஆனால் ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. “பாம்புகள்.. அதாவது, நிஜப் பாம்புகள் ஆபத்தானவை” என்ற  அச்சத்தை மேலும் ஆழமாக மக்கள் மனதில் பதிக்கிறது அவரது பேச்சு.
 ஏற்கெனவே பாம்பு என்றால் எதிர்மறை எண்ணம் நம்மிடையே இருக்கிறது. கண்ணில் படும் பாம்பை, கொன்று போட்டுவிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கிறோம். 
 ஆனால்,  உண்மையில் பாம்புகள் ஆபத்தானவை அல்ல.  அவை நமது நண்பர்களே!
 உலகின் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் உயிரினம் பாம்பு.   அது மட்டுமல்ல.. வயல்வெளிகளில் நெல்மணிகளை அழிக்கும் எலிகளை வேட்டையாடி உண்டு,    விவசாயிகளின் நண்பனாக பாம்புகள் விளங்குகின்றன.   விவசாயிகளுக்கு நண்பன் என்றால் நம் அனைவருக்குமே நண்பன் தானே!
அது மட்டுமல்ல. பாம்புகள், நாம் நினைப்பதைப்போல கொடூரமானவை அல்ல.  சினிமாக்களில் வருவது போல, மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கொத்தி கொல்வதில்லை. அதெல்லாம் ராமநாராயணனர்களின் கற்பனை.
உண்மையாச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்…  மனிதனைக்கண்டுதான் பாம்புகள் பயந்து ஓடுகின்றன. இதை நான் சொல்லவில்லை.. விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். “மனித வாசம் கண்டாலே பயந்து ஓடி, மறைந்துகொள்ளும் கூச்ச சுபாவமுள்ள உயிரினம்தான் பாம்பு” என்கிறார்கள் அவர்கள்.

ராமண்ணா
ராமண்ணா

பாம்பு செல்லும் பாதையில், நாம் தவறுதலாக சென்று  மிதித்துவிட்டால், பயந்து போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நம்மைக் கொத்துகிறது அல்லது துரத்துகிறது. மற்றபடி, நாம் இம்சை கொடுக்காதவரை, நம்மை அவை  தொந்தரவு செய்வதே இல்லை.
“அதென்ன பாம்பு செல்லும் பாதை…  நம்ம இடத்துக்கு வந்து பயமுறுத்துற பாம்பை கொல்லக்கூடாதா” என்று சிலர் கேட்கட்கூடும். உண்மையில் பாம்பின் இடத்தை ஆக்கிரமித்துத்தான் நாம் குடியிருப்புகளை கட்டி வாழ்கிறோம்.
மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான். பாம்பு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
சரி, விஷம் பற்றி பார்ப்போம்.
பாம்புகளில் 3,000 வகைகள் இருக்கின்றன.  அவற்றில் இந்தியாவில்  இருப்பவை 276 வகை. இவற்றில் 176 வகை பாம்புகள் விசம் அற்றவை.  இன்னும் சொல்லப்போனால், கடியின் தன்மை, மக்கள் வாழுமிடத்தில் நடமாட்டம்.. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் நான்குவைகை பாம்புகளுக்கே நாம் அஞ்ச வேண்டும்.
அவை நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியனதான். . அதுவும் ஏற்கெனவே சொன்னது போல, தவிர்க்க முடியாத நிலையில்தான் அவை  நம்மைக் கடிக்கிறது. அதுவும்கூடத் தற்காப்புக்காகத்தான்.
உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். வருடத்துக்கு 10 ஆயிரம் பேர்.   இவர்களில் 9900 பேர். .அதாவது 99 சதவிகிதம் பேர்.. கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி கிடைக்காமலும்தான் மரணமடைகிறார்கள். 
உலகிலேயே மிக அதிகமான விஷப் பாம்புகள் உள்ள நாடு ஆஸ்திரியாதான்.  அங்குப் பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வும், முதலுதவிகளும் பரவலாக இருக்கின்றன. ஆகவே, அங்கே வருடத்துக்கு 10க்கும் குறைவானவர்களே பாம்புக் கடியால் இறக்கிறார்கள்.
சரி, எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விட்டது. என்ன செய்யலாம்?
அரசு மருத்துவமனைகளிலும், பல தனியார் மருத்துவமனைகளிலும் பாம்பு விஷத்தை முறியடிக்கும் மருந்து உண்டு. ஆகவே பாம்பு கடித்தவுடன் அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் தகுந்த மருத்துமனையை நாடுங்கள்.
கடித்த பாம்பை கொன்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது.
ஒரு ஆட்டோவின் கண்ணாடியை திருப்பி, பக்கத்து ஆட்டோவின் பழுதை சரி செய்வாரே.. அஜீத்.. அது போலத்தான்.  ஆகவே, கடித்த பாம்பையும் கொல்ல வேண்டியதில்லை!
சிம்பிளா சொன்னா…  பாம்பு கடிச்சு இறந்த மனுசங்களைவிட, மனுசன் அடிச்சு செத்துப்போன பாம்புங்கதான் அதிகம். இதிலேருந்தே யாரு ஆபத்தான ஆளுன்னு பார்த்துக்குங்க!
 சரி, திருமா பேசின ரெண்டு வரிக்காக, ஒரு கட்டுரை தேவையானு தோணும்.
குறிப்பிட்ட விலங்கை ஒரு கட்சியின் சின்னமா சொன்னா, எதிர்க்கட்சிக்காரங்க, அந்த விலங்கை அடிச்சு உதைச்சு வெட்டி கொடுமைப்படுத்தறது நடந்த நாடுதான் நம்ம நாடு. அவ்வளவு அறிவாளிகள் நம் மக்கள்.
அதுவும் பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம்.. தேடிப்பிடிச்சி அடிக்க ஆரம்பிப்பாங்க!
 அதனாலதான், “மனிதர்களின் நண்பர்களான பாம்பை அரசியலுக்கு இழுக்காதீர்கள” என்று கேட்டுக்கொள்ள இந்த கட்டுரை அவசியமாகிறது.
 (“தமிழகத்தை கோயிலாக்குவோம்” என்று திருமா பேசியிருப்பது குறித்தும் தனிக்கட்டுரை எழுதலாம். அதை பிறகு பார்ப்போம்.)