ஜெய்ப்பூர்:
ல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் நகர மேயர் சிவ சிங் 52 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மேயராக பதவி வகித்து வருபவர் சிவ சிங் (52). இவர் அம்மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் சிவ சிங் 44.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 53 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
21-1466454707-bharatpurmayorshivsingh
இதுகுறித்து சிவசிங் கூறுகையில், “தினமும் இரவில் இரண்டு மணி நேரம் கடினமாக படித்தேன். பகலில் அதிக பணிகள் இருப்பதால் இரவு நேரத்தில் மட்டும் படித்தேன். 1971-72ம் ஆண்டு சொந்த பிரச்சனை காரணமாக படிப்பை தொடர முடியாமல் 8-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டிய சூழல்.
ஆனால், எல்லோருக்கும்  கல்வி மிக முக்கியம் என பின்னர் உணர்ந்தேன்.
இந்த தேர்வில் நான் தோல்வியடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்திருப்பேன். மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.
சிவ சிங் படிக்க முன்வந்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. புதிய சட்டத்தின்படி நகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படை தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிட்டால், அவரது இந்த கல்வித்தகுதி அவசியமாகும்.
இவரைப் போன்று ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான சிவ சரண் யாதவ் என்பவரும், 10ம் வகுப்பு படித்துவிட வேண்டும் என்ற வேட்கையில் தொடர்ந்து பரீட்சை எழுதி வருகிறார். நம்பிக்கை தளராமல் 47வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியும் தோல்வியடைந்துள்ளார். ஆனாலும் அடுத்த முறை வெற்றி பெறுவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
படிக்கமலேயே, போலியாக சான்றிதழ் பெற்று பெயருக்கு பின்னால் பட்டங்களைப் போட்டுக்கும் பெரும் தலைவர்களும் இருக்கும் நாட்டில், இப்படி உண்மையாக படித்து தேர்ச்சி பெற நினைப்பவர்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குவோம்!