எடப்பாடி அரசுக்கு பெருபான்மை: சுப்ரீம் கோர்ட்டு 11ந்தேதி விரிவான விசாரணை!

டில்லி,

மிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை நிரூபித்தது தொடர்பாக மா.பா. பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில் ஜூலை11ந்தேதி விரிவான விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர்.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டியும், பண ஆசை காட்டியும் சசிகலா தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால், அவரது ஆதர வாளரான எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 18ந்தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி பெரும்பான்மை ஓட்டெடுப்பு நடைபெற்றது.

இந்த ஓட்டெடுப்பின்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் சபா நாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்தும், எதிர்க்கட்சியினரை சபையையை விட்டு வெளியேற்றியும், வாக்கெடுப்பை நடத்தினார்.

இதை எதிர்த்து, ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கான ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் இவ்வழக்கின் விசாரணை ஜூலை 11 ம் தேதி விரிவாக விசாரணை செய்யப்படும் என்று ஒத்தி வைத்தனர்.

நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பான வழக்கில் சட்ட உதவிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ஜூலை 11 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை ஓட்டெடுப்பை ரகசியமான முறையில் நடத்த சட்டத்தில் இடமில்லையா எனவும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


English Summary
The majority of Edappadi Government, Supreme Court on a detailed trial on July 11!