குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த  கிராமத்து இளைஞர் உருக்கமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.

டிசம்பர் 8ந்தேதி அன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வ தற்காக சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் ராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.

இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து அறிந்த நஞ்சப்பசத்திரம் மக்கள் தங்களது உயிரைப் பொருட்படுத்தாது, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிபின்ராவத் உள்பட சிலர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் உயிருடன் இருந்தனர். அவர்களை அந்த பகுதிகள் மக்கள் தங்கள் உடமைகள் மற்றம்  போர்வைகளைக் கொண்டும் மீட்டனர்.

இதற்காக விமானப்படை அவர்களுக்கு நன்றி தெரிவித்தது. விமானப் படை சார்பில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தினருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு என நான்கு பொருட்கள் வழங்கப்பட்டு,  நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் வழங்கியுள்ள நன்றிகடிதத்தில், “தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த அனைத்து உதவிகளுக்கும் முப் படை சார்பில் நன்றி கூறுகிறோம் என  நஞ்சப்பசத்திரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதுடன்,  தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட சிவகுமார் என்ற இளைஞர், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தாங்கள் மீட்டபோது உயிருடன் இருந்தார் என்று, அவரது கடைசி நிமிடங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

நாங்கள் அவரை நெருங்கி, மீட்டபோது தன்னிடம் பிபின் ராவத் தண்ணீர் கேட்டதாகவும், அவரிடம் நாங்கள், சார் உங்களை நாங்கள் எப்படியும் காப்பாத்திடுவோம் என்று உறுதி கூறினோம், அப்போது அவர் எங்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டாரு. அவரை போர்வையில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றும் வரை அவரது கை அப்படியேதான் இருந்தது, அவர் எப்படியும் பிழைத்து விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், 3மணி நேரம் கழித்து ராணுவ அதிகாரி வந்து, தளபதி இறந்துட்டாருன்னு சொன்னாரு. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் குறித்து குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிகுமார் கூறியபோது, “விபத்து நடந்த நேரத்தில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பணியில் இருந்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, காவலர்கள் ஆகியோர், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று,  துரிதமாக செயல்பட்டு மூன்று பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துரதிருஷ்டவசமாக இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் இருப்பது ஆறுதலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.