இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை வாக்கெடுப்ப நடைபெற உள்ளது. இதில், இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்ந்து விட்டதால், இதில் இம்ரான் அரசு தோல்வியை சந்திப்பது உறுதியாகி இருக்கிறது.  இருந்தாலும் நாளை எதிர்க்கட்சிகள் வீசும் கடைசி பந்தில் (வாக்கெடுப்பு) அதிசயம் நிகழவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பெரும்பான்மை இழந்துள்ளது.  இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.   ஏப்ரல்  3-ஆம் தேதி பிரதமர் இம்ரான்கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்பட்டது.

இதற்கிடையில் மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்கிறது என்று குற்றம் சாட்டினார். நம்பிக்கைஇல்லா தீர்மானத்தை சந்திப்பேன் என்றும் கூறினார். ஆனால்,  ஏப்ரல் 3ம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை இம்ரான்கான் தவிர்த்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று அவையை நடத்திய துணை சபாநாயகர் காசிம்கான் சுரி பாகிஸ்தான்  அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது என்று அறிவித்தார். மேலும், இம்ரான் கான் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. மேலும், இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக அப்படி என்ன வெளிநாட்டு சதி நடந்துள்ளது என்பதை அறிய, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்குகளை விசாரித்தது. முதல் 3 நாட்கள் நடந்த விசாரணையில் அரசு, அதிபர் ஆல்வி, சபாநாயகர் ஆசாத் கெய்சர், துணை சபாநாயகர் காசிம் சுரி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது,  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், நாடாளு மன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் அறிவுறுத்த முடியாது  என்றும், பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் செயல்படுவதற்கு தடையில்லை என்று பச்சைக்கொடி காட்டியதுடன் ஏப்ரல் 9ந்தேதி (நாளை)  ஆம் தேதி காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம். விலகியதை அடுத்து ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. அத்துடன், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தாலும் அவர் தோல்வி அடைவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் விலைபோய்விட்டால், இம்ரான்கான் அரசு பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அ

எதிர்க்கட்சிகளின் வீசியுள்ள கடைசி பந்தை  இம்ரான்கான் எதிர்கொள்வாரா? அல்லது ஆட்டத்தில் இருந்து விலகுவாரா? என்பது நாளை தெரிய வரும். முடியாத பட்சத்தில், இம்ரான்கான்  பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.