கடலூர்: இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் செய்யப்படுகிறது என திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்து உள்ளார்.

 

கடலூரில்  இன்று செய்தியாளர்களை சந்தித் திமுக அமைப்பு செயலாளர், அதிமுகவின் போதைக்கு எதிரான போராட்டம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது,  அரசியல் நெருக்கடி காரணமாக திமுக மீது போதைப்பொருள் குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி சுமத்துகிறார்.  ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன என்பதை ஈபிஎஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவை பரப்பியது அதிமுகதான். அதிமுகவின் குட்கா விவகாரத்தை திசை திருப்பவே அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி மீது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார் என எதிர் கேள்வி எழுப்பியவர்,  திமுக அயலக அணி செயலாளராக இருந்த ஜாபர் சாதிக்  போதைப் பொருள் புகாருக்கு உள்ளானதும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.  ஆனால்,  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

பாஜக மாநில தலைவரின் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர்,  தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது போல் அண்ணாமலை கூறுகிறார்.  ஆனால், அதானி துறைமுகத்தில் இருந்துதான் அதிக போதைப்பொருள் வெளியே வருகிறது. இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றவர்,  போதைப்பொருளின் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன என்றார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், ஆர்.எஸ்.பாரதி போதை பொருள் கடத்தல் குற்றவாளியான திமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஜாபர் சாதிக்கை நியாயப்படுத்துபோல கருத்து தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என  குற்றம் சாட்டியிருந்தார். மேலும், . போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்வலியுறுத்தி இருந்தார்.

டில்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கியது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் தேடப்பட்டு வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோருடன் ஜாபர் சாதிக் இருக்கும் படங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் முகமது சலீம் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு அண்ணாமலை கூறியிருப்பதாவது: ஜாபர் சாதிக் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், பா.ஜ., எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

கடுமையான நடவடிக்கை தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.