சென்னை:
மூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத் தொடர்ந்து,  சொந்த ஊருக்கு திரும்பியவர்களில் பெரும்பாலோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், அதை மதிக்காமல் மக்கள் வெளியே சுற்றியதால் ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிய வந்துள்ளது.
அதுபோல அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்காக திறக்கப்பட்டிருந்த கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக விலகலை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததால், அங்கு பணியாற்றிய ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக  அங்கு சில்லரை வணிகத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள தால், ஊர் திரும்பும் வணிகர்கள், தொழிலாளர்களுக்கு ஊர் எல்லையில் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வணிகர்கள், தொழிலாளர்கள் என பாகுபாடின்றி  அடுத்தடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே  கோயம்பேட்டில்  வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய போலீஸ்காரர்கள் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.