மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள்,  நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது. இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

250 கோடி ரூபாய் வசூலித்து ‘வசூல் கிளப்’பில் இணைந்திருக்கும் ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது