சென்னை,

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தொடங்கினார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார் தரலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இறுதி நாளில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்நிலையில் சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் வன்முறையால் பாதிக்கப்பட்டது.

இந்த வன்முறை குறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷனை அரசு அமைத்தது. இந்த குழுவினரின் விசாரணை இன்று தொடங்கியது.

சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானந்தர் இல்லம் பகுதியில் இன்று நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து  வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நேரில் ஆய்வு நடத்தினார். மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடமும், அங்குள்ள வணிகர்களிடமும் வன்முறை குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் கேட்டு வருகிறார்.

அப்போது, பொதுமக்கள், இந்த வன்முறை சம்பவத்தின்போது தங்களுக்கு தெரிந்த சம்பவங்களை தன்னிடம் புகாராக கூறலாம் என்று கூறினார்.

மேலும்,  புகார் தருவது எப்போது என்பது பற்றி பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்,  சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் விசாரணை கமிஷன் அலுவலகம் உள்ளது என்று கூறினார்.

விசாரணை அறிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் அரசிடம் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து மதுரை, கோவை, அலங்காநல்லூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.