விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தி ஜனநாயகத்தை போற்றும் நாடா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் மதுபான ஊழல் வழக்கில் பலரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதில் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ஒருவர் தனக்கு ஜாமீன் விடுதலை கிடைக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் என்ன வாதம் வைக்கப்படுகிறது தெரியுமா?

மதுபான ஊழல் வழக்கில் கைதானவர்களை குறைந்தபட்சம் ஓராவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று ‘விதி’ இருக்கிறது. இவர் சிலையிடப்பட்டு 9 மாதங்கள் தான் ஆகின்றன. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிடுகிறது.

இதற்கு பல முன் உதாரணங்கள் உண்டு என்றும் இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் செந்தில் பாலாஜி வழக்கு என்றும் அமலாக்கத்துறை பட்டியலிடுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை கழித்த பிறகுதான் ஜாமீன் என்றெல்லாம் விதி கிடையாது. அப்படி இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? என்று பொட்டில் அறைந்தார் போல் கேட்டுள்ளது.

நாட்டின் அமலாக்கத்துறை எந்த அளவுக்கு ஆணவம் பிடித்து தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இதைவிட உதாரணம் இருக்க முடியாது.

அதாவது,” நாங்கள் யாரை வேண்டுமானாலும் பிடித்து உள்ளே போடுவோம். அவருக்கு ஒரு வருடம் கழித்துதான் நீங்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்” என்பதுதான் அமலாக்கத்துறை நேரடியாக சொல்லும் ‘கட்டளை’ போல.

அதாவது விசாரித்து ஒருவரை கைது செய்து ஆவணங்களைத் திரட்டி குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி வாங்கி தர எங்களுக்கு துப்பு கிடையாது. பிடிப்போம் உள்ளே போடுவோம். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, உள்ளே போனவன் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவுதான் எங்களுக்கு வேண்டும்”- இதுதான் அமலாக்க துறையின் பருவமான நிலைப்பாடு போல.

மன்னர் காலத்து சர்வாதிகார ஆட்சிகளில் கூட அரண்மனை நிர்வாகம் இவ்வளவு திமிர் தனமாக செயல்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது.

இத்தனைக்கும் அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு சதவீதத்தில்தான் குற்றம் நிரூபிக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் அடிக்கடி சாட்டையை சுருட்டுகிறது அப்போதும் அமலாக்கத் துறைக்கு வெட்கம் வரவில்லை.

இரண்டாவது செய்தியை பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமி காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்படுகிறாள். பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது.

இதையடுத்து 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. செஷன்ஸ் நீதிமன்றம் அந்த இளைஞருக்கு தூக்கு விதிக்கிறது. உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்கிறது. இளைஞர் மரண தண்டனையை எதிர்நோக்கிக்கொண்டே, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்திப் மேத்தா ஆகியார் கொண்ட மூன்று பேர் பெஞ்ச் கொந்தளித்துப் போய் இளைஞரை விடுதலை செய்ய தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

“வழக்கில் எல்லாமே சந்தர்ப்ப சாட்சியங்கள்.. அதைவிட முக்கியமான விஷயம் ஒவ்வொரு சாட்சியத்தையும் அரசு தரப்பு திட்டமிட்டே போலியாக உருவாக்கி இருக்கிறது” என்று விசாரணை அதிகாரிகளின் தலையில் உச்சநீதிமன்றம் பலமாக குட்டியுள்ளது.

இப்படி ஏராளமான ஓட்டைகளை வைத்துக்கொண்டு ஒரு இளைஞரை எதற்காக மரணத்திற்கு அனுப்ப செசன்ஸ் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் துடித்தன என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இப்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த இளைஞர் விடுதலை ஆகி இருக்கிறார்.

விசாரணை அதிகாரிகளின் அலட்சியம் கலந்த ஆணவத்தால் அந்த இளைஞர் பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இப்போதாவது சாவின் விளிம்பிலிருந்து தப்பி இருக்கிறாரே என சந்தோசப்படுவதா என்று புரியவில்லை. ஆனால் இவ்வளவுக்கும் காரணமான விசாரணை அதிகாரிகள் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அவர்கள் வேலையை ‘ஜாலியாக’ பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மூன்றாவது செய்தி..

ஆறு வயது சிறுமி பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருபதாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை மத்திய பிரதேச உயர் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. உண்மையான குற்றவாளியை காப்பாற்றுவதற்காக இந்த இளைஞரை திட்டமிட்டு அரசு தரப்பு சிக்க வைத்திருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

குற்றவாளி, சிறுமியின் நெருங்கிய உறவினராக இருக்க வாய்ப்புள்ளதால் அவரைக் காப்பாற்ற சிறுமியின் குடும்பமே உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதை யும் மறுப்பதற்கு இல்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது..

இதற்குப்பிறகும் விசாரணை அதிகாரிகளுக்காக வெறுமனே கைகட்டி கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட இளைஞர் வழக்கு தொடரவும் அனுமதி அளித்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட மூன்று வழக்குகளையும் அலசி ஆராய்ந்து பாருங்கள்.

நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்ற திமிர்த்தனம் விசாரணை அமைப்புகளிடம் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்று தெரியவரும்.

ஒரு வழக்கில் விசாரணை அதிகாரியால் சில காரணங்களால் குற்றம் நிரூபிக்கப்படக்கூட முடியாமல் போகலாம்.

ஆனால் மற்றவர்களை காப்பாற்றுவதற்காக திட்டமிட்டு வம்படியாய் ஒருவரை சிக்க வைத்து விசாரணை கைதியாக பல ஆண்டுகள் சிறையில் வாட விடுவது அப்புறம் போலி சாட்சியங்கள் மூலம் தண்டனையே வாங்கி கொடுத்து விடுவது போன்றவற்றை செய்யும் அதிகார வர்க்கத்தை இனியும் சும்மா விடக்கூடாது

மற்றவர்களுக்கு என்ன தண்டனையோ அதைவிட இரு மடங்கு சிறை தண்டனை, பெருமளவு அபராதம் போன்றவை மதிக்கப்பட வேண்டும்.

அப்போதுமட்டுமே விசாரணை அமைப்பில் உள்ளவர்களின், “நம்மை யார் என்ன செய்து விட முடியும்?” என்ற ஆணவமான மனநிலை ஒழிவதற்கு வாய்ப்புண்டு.