கீவ்:
ஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ரஷ்யா நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் செவிசாய்க்காததால் போர் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பிரிவினைவாத கிழக்குப் பகுதிகளான லுகான்ஸ்க், டோனட்ஸ்கில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறியும், அதற்குத் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் கடந்த மாதம் 24 ஆம் தேதி இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதாக ரஷ்யா கூறி வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து 22வது நாளாக இந்த போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 12 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கான பீரங்கிகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இதுதவிர உக்ரைனில் நேற்று வரை ரஷ்யா படைகளால் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் உள்பட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.

உக்ரைன் தரப்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், ‛‛ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் உக்ரைனில் இனப்படுகொலை செய்வதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த அவசர உத்தர பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. மேலும் போர் தொடர்பான இழப்புகளும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்த மனு மீதான் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து உக்ரைன் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியாக கூறினார். உக்ரைன் நாட்டின் புகார் குழந்தைத்தனமானது எனவும், விசாரணைக்கு வர முடியாது எனவும் ரஷ்யா கூறியது. இந்நிலையில் தான் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவினை ரஷ்யா ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பன்னாட்டு ஒப்பந்தங்கள் இன்படி சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ரஷ்யாவை நிச்சயம் கட்டுப்படுத்தும் என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.