சென்னை,
சசிகலா ஆதரவாளர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர், ஜெய டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்பட அவரது உறவினர்கள் உள்பட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், டிடிவிக்குச் சொந்தமான புதுவை இல்லம், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீடு, அவரது சகோதரர் விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, டாக்டர் வெங்கடேஷ், அவரது மருத்துவமனை, மன்னார்குடியில் உள்ள திவாகர் வீடு, கல்லூரி, அவரது மகன் விஜயானந்த் அலுவலகம் , கோட நாடு எஸ்டேட், புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள சொகுசு பங்களா உள்பட 187 இடங்களிலும்,. தினகரன் ஆதரவாளரான கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியின் பெங்களூரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக ஓரே நேரத்தில் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சோதனை இதுவரை நடைபெறவில்லை என்றும், சோதனை நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், ‘’சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பொதுநலத்தோடு வருமானவரித்துறை செயல்பட வேண்டும். எந்த அசியல் நோக்கமோ, உள்நோக்கமோ இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.