பேராசிரியர் ராஜ்மோகன்     பகுதி-3

முன்னதாக மார்ச் 2015ல், பார்லிமெண்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரெங்கராஜனின் கேள்விக்குப் பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிமீ பரப்பளவு மீத்தேன் எரிவாயு தோண்டி யெடுப்பதற்கான “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனிக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது எனவும் “மேலும் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக ONGC நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை” எனவும் கூறியிருந்தார்.

மத்திய அரசு அளித்த விளக்கம் குறித்து, பா.ஜ.க.வின் எஸ்.ஆர். சேகர், “மீத்தேன் திட்டத்தைக் கருணாநிதி தொடங்கி வைத்தார் – ஜெயலலிதா தொடர்ந்தார்… காங்கிரஸ் கொண்டு வந்தது – பாஜக ரத்து செய்தது” எனப் பெருமையுடன் கூறினார்.

ஆனாலுன், இது பாஜகவின் பொய்வேடம். மீத்தேன் திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை. GEECL நிறுவனம் எந்த வேலையும் செய்யவில்லை என்பதால் தான், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது, முற்றிலுமாகக் கைவிடப்பட வில்லை. எனவே இது தற்காலிகமான நிறுத்தம் தானென விமர்சனம் வைக்கப்பட்டது.

இப்போது இந்த விமர்சனத்தை உண்மையென நிரூபிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

புதிய பாட்டிலில் பழைய சரக்கு:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாட்டின் 31 (28 இடங்கள் நிலத்திலும், 16 இடங்கள் கடலுக்கடியிலும் உள்ளன) இடங்களில் ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) எடுப்பதற்கு மத்திய அமைச்சரவை சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இந்த 31 இடங்களில் இருந்து  40மில்லியன் மெட்ரிக் டன்  எண்ணையும்  மற்றும் எரிவாயு 22.0 பில்லியன் மீட்டர் கியூப் ஹைட்ரோகார்பன்  எரிவாயுவும் , சுமார் 15 ஆண்டுகளில் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

43 இந்திய கம்பெனிக்களுக்கும், 4 அந்நிய நிறுவங்களும் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து இருந்தன.  பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என  பிப்ரவரி 15 அன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேன் , ஈதேன், ப்ரோபேன்…. போன்ற வாயுக்களின் பொதுப்பெயர். இந்த பெயரில் தான் தற்போது, பாஜக அரசு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

காரைக்காலில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீத்தேன் திட்டத்தை மீண்டும்  ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் அனுமதித்துள்ளது மத்திய அரசு. தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

நெடுவாசல் பகுதி விவசாயிகளின் கருத்தினை  கேட்காமலேயே மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் குறித்து எதையும், சம்பந்தப்பட்ட நிறுவனம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பட்த்தக்கது. மக்கள் மீண்டும் போராடத் துவங்குவர்.

தமிழகத்தின் தற்சார்பு வேளாண் உற்பத்தியையும், தமிழக மக்களின் வாழ்வையும் மொத்தமாகச் சிதைக்கும் வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது. பொதுவாக மக்கள் வாழ்விடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக உண்டு உடுத்தி, உறைந்து, விவசாயம் செய்து வாழ்ந்து வரும் தொல்குடி மக்கள் சமுதாயத்தை, உடமையற்றவர்களாகவும், அவர்கள் சந்ததியினர் நிலமற்றவர்களாகவும் ஆக்குவது என்பது அறிவுடைமை ஆகாது. மேலும் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே படிவங்களுள்ள இந்த நிலத்தைச் சூரையிடுவது உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதாகவே தெரிகின்றது. காவிரியை வறண்டுவிடச் செய்து அந்த நிலையில் மக்கள்மீது இந்தத் திட்டத்தைத் திணிப்பது என்பதை என்ன சொல்வது? மக்கள், கட்சி வாரியாகப் பிரிந்து சிந்திக்காமல் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தால் நல்லது.

வளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இது போன்ற திட்டங்கள், கண்டிப்பாக மக்களின் வளர்ச்சிக்காக அல்ல. இவை, மக்களை வாழவும் கூட விடாமல் விரட்டியடிக்கும் திட்டங்கள்.

அப்படியென்றால் இவை யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்கள்?

விவசாயத்தை அழிக்க வரும் இத்திட்டங்களின் உண்மைப் பின்னணி என்ன?

மீத்தேன் எடுப்பதோடு இது நின்று விடுமா?

அரசுக்கு நட்டம் என்று தெரிந்தே மீத்தேன் எடுப்பதன் உள்நோக்கம் என்ன?

பசுமைத்திட்டம் எனும் போலி விளம்பரம்:

மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. அதனை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும் மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும் கம்பெனி எடுத்துக் கூறுகின்றது.நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுப்பது ஒரு பசுமைத் திட்டம் என கம்பெனி பொய்யான விளம்பரம் செய்கின்றது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.

நிலம், நீர், மணல் நஞ்சாக்கி ஹைட்ரோ கார்பன் /மீத்தேன் திட்டம் செயல்படுத்துவது

கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம்.

(முற்றும்)

ஹைட்ரோ கார்பன் எனும் எமன்!  தொடர்…

 

ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! தொடர்….2