சென்னை,

மிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதுகுறித்து, அமைச்சர்களின் இமெயில் முகவரிக்கு தெரிவியுங்கள் என்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் இருந்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் திடீரென காணாமல் போயின.

இது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ( ஐ.டி. விங்) அமைப்பின் புதிய பொறுப்பாளரான பிடிஆர்.பி.தியாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழக அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் இ மெயில் முகவரிகள் திடீரென நீக்கப்பட்டுள்ன.

அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு கொள்ளவும், முக்கிய தகவல் களமாக உள்ள அரசு இணையதளத்தில் எவ்வித காரணம் இன்றி அமைச்சர்களின் செல்போன் எண்கள், இ மெயில் முகவரி நீக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்றும், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும், அரசின் வெளிப்படை தன்மைக்கும் எதிரானது என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

தொழில்நுட்ப கோளாறால் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டனவா அல்லது வேறு காரணமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் (ஆகஸ்ட்)21ம் தேதிக்குள் பதில் அளிக்க  சென்னை ஐகோர்ட் முதல் அமர்வு ஆணையிட்டுள்ளது.