சென்னை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள்  போராட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கடந்த 100 நாட்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்றைய நடைபெற்ற மக்களின் மாபெரும் முற்றுகை போராட்டத்தின்போது, போலீசார் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

3தடவை நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிர், இனறு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்   ஜெயக்குமார்  கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு  ஆதரவு அளிக்காது.

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது  ஜனநாயக அமைப்பில் வன்முறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தியது தவறு . தூத்துக்குடி  போராட்ட சம்பவத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பது பற்றி அரசு முடிவு எடுக்கும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஏற்புடையதல்ல, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 100 நாட்களாக போராடி  வரும் மக்கள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத தமிழக அரசு  கண்ணை மூடிக்கொண்டிருந்துவிட்டு, தற்போது பலரை சுட்டுக்கொன்றுவிட்டு, மக்கள் கல்வீசி தாக்கியதுதான் தவறு என்பதுபோல சர்ஜாப்பு செய்வது கண்டிக்கத்தக்கது. மக்களை இந்த நிலைக்கு தூண்டியது யார் தவறு?

மக்களின் போராட்டத்தை 100 நாட்களாக தொடர விட்டது யார் தவறு….? அரசின் தவறா… மக்களின் தவறா…? ஆரம்பத்திலேயே போராட்டக்காரர்களை அழைத்து பேசி, முடிவு எடுக்க தவறிய தமிழக அரசு, தற்போது அடக்குமுறை மூலம் மக்களின் போராட்டத்தை அடக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.  தமிழகஅரசின் எதேச்சதிகார நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.