சென்னை:
சிக்கலான அரசியல் சூழல் நிலவும் இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர், சட்டப்படி மூன்று முடிவுகளை எடுக்க முடியும் என்று சட்டவல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அ.திமு.க. (சசிகலா) அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு 123 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பதாக ஆளுநரிடம் ஆதரவு கடிதம் கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தனக்கே பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் மெஜாரிட்டியை நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டப்படி ஆளுநர் என்ன செய்ய முடியும் என்று சட்டவல்லுநர்களிடம் கேட்டபோது, மூன்று வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒன்று:
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் ஒரே நேரத்தில்.. மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பளிப்பது. அதாவது சட்டமன்றத்தைக் கூட்டி உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்வது. யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கிறதோ அவரை ஆட்சி அமைக்க அழைப்பது. இருவருக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஆட்சியைக் கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது.
இரண்டு:
தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக சொல்லும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது. பிறகு அவரை மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவது. அவரால் நிரூபிக்க முடியாவிட்டால் ஆட்சியைக் கலைப்பது.
மூன்று:
இரவரையுமே ஒதுக்கிவிட்டு, தற்போதைய சிக்கலான சூழலை கருதி சட்டமன்றத்தை சில காலம் முடக்கி வைப்பதாக அறிவிப்பது
இந்த மூன்று வாய்ப்புகளில் ஆளுநர் எந்த முடிவை எடுப்பார் என்பது இன்று தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாத்தில் பேசப்படுறது.