சென்னை: ஆளுநர் மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும் என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 18) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மறைந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். காரணம் சொல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையது அல்ல என்று சட்டமன்றம் கருதுவதாக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால், சட்டப்பேரவையில் மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுந ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாடு அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற இன்று (18ந்தேதி) சிறப்பு பேரவை கூட்டத்தொடரை தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளத. இந்த கூட்டம் இன்று காலை 10மணிக்கு தொடங்கியது. வழக்கமான நடைமுறைகளைத் தொடர்ந்து, முதல் நிகழ்வாக, மறைந்த தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். எந்தவித காரணமும் சொல்லாமல் அரசின் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையது அல்ல என்று சட்டமன்றம் கருதுவதாக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.
இந்த நிலையில், பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவரது உரையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலமான தமிழ்நாட்டில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.
மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றவர், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டியதுதான். ஆனால், அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்கள் நாங்கள்.
உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியமானது. ஜனநாயகத்தை ஆளுநர் ஆர்.என். ரவி அவமதிக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.
சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும் தமிழக சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதிக்கிறார். ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றவர், ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர். சில இடையூறுகளால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது. ஆளுநர் சரியாக தனது வேலையை செய்யாததால், இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
நிதி நெருக்கடி, மத்திய அரசின் நெருக்கடி இல்லையென்றால் தமிழ்நாடு அரசு இன்னும் சிறப்பாக செயல்படும்.
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்? மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் . சட்டப்பேரவை செயலைத் தடுக்கும் சக்தி ஒன்று முளைத்தால், அது ஜனநாயகத்தை அழிக்கும்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தலையாய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முட்டுக்கட்டையிடுகிறார் ஆளுநர். வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
இவ்வாறு பேசினார்.