ஏழுமலை வெங்கடேசன்:

டில்லியில் தமிழக விவசாயிகள் இரண்டுவாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம், விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு..

அவர்களின் போராட்டக்களம் சரியானதா இல்லையா என எழுந்துள்ள சர்ச்சைக்குள் போகாமல் பிரச்சினையின் ஆணிவேருக்குள்  போவோம்.

மேற்படி விவசாயிகளின் கோரிக்கைகளில் ஆழ்ந்து பார்த்தோமானால், தமிழகத்தில் தற்கொலை விவகாரத்தை தவிர மற்ற மூன்று விஷயங்களும் வருடந்தோறும் ஏதோ சடங்கு போல் தவறாமல் நடக்கும். பயிர்க்கடன் தள்ளுபடி என இல்லாத கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளே கிடையாது. இப்படி ரெடிமேட் விஷயமாகிவிட்டது, கடன் தள்ளுபடி.

ஏன் தள்ளுபடி செய்கிற நிலைவருகிறது என எந்த அரசியல் கட்சியும் யோசிப்பதில்லை. உரிய அளவில் நீர் கிடைத்தால் ஏன் விவசாயம் பொய்த்துப்போகப்போகிறது? விவசாயிகளுக்கு எப்படி நஷ்டம் ? போன்ற கேள்விகளை ஆட்சியாளர்களும் சரி, ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களும் சரி நினைத்துப்பார்ப்பதேயில்லை.

எல்லாவற்றிற்குமே அடிப்படை காரணம் நீர் மேலாண்மையை கைகழுவிக்கொண்டே இருப்பதுதான். ஒரு பக்கம் கோடிகோடியாய் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் கொடுக்கும் அரசுகள், நீர் ஆதாரங்களை காப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது ஆகிய மூன்று விஷயங்களை கண்டுகொள்வதேகிடையாது.

ரயில்வே துறைக்கு சொந்தமான பொருட்கள், வெட்டவெளியில் தாறுமாறாய் போடப்பட்டி ருக்கும். ஆனால் திருடு போகாது. எவனும் தொடக்கூட மாட்டான். எடுத்துக்கொண்டுபோய் விற்க முயற்சித்தாலும் காயலான் கடைக்காரர் வாங்கவேமாட்டார். காரணம், மாட்டிக்கொண்டால் சொத்தை விற்று வழக்கு நடத்தவேண்டிய கதிக்கு ஆளாவோம் என்ற பயம்தான்.

ஆனால் அதே ஆறு ஏரி, குளம் குட்டை போன்ற வற்றை பாருங்கள். ஒன்று குப்பைகொட்டி மூடுவிழா ஆரம்பிப்பார்கள்.. இல்லையென்றால் முதலில் திறந்தவெளியாக பயன்படுத்தத்தொடங்கி, படிப்படியாக ஆக்கிரமித்து முடிவில் முழுவதுமாய் ஆட்டையை போட்டுவிடுவார்கள்.

வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, மின்வாரியம் என, லஞ்ச எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு நீர் ஆதாரங்கள் சாவதற்கு பல தரப்பும் உடந்தையாக இருக்கும்.

இதைவிடக்கொடுமை, அரசே தனது புதிய பிரமாண்டமான கட்டிடங்களை கட்ட நீர்நிலைகளை அடியோடு கொல்வதுதான். தொலைநோக்கு பார்வையே இல்லாமல் காலம் காலமாய் நடந்தேறிவருபவை இவை.

ஒரு நீர் ஆதாரத்தின் பரப்பு கடந்த ஆண்டு இருந்தஅளவுக்கு இந்த ஆண்டும் இருக்கிறதா என உறுதிசெய்து மக்கள் பார்வைக்கு வைக்கும் நடவடிக்கை என்பது அரசிடம் கிடையவே கிடையாது. காக்கிற யோக்கியதையே இல்லாதபோது அதை பராமரிக்கவும் மேம்படுத்தவும் என்கிற அடுத்த கட்ட சிந்தனையை இவர்களிடம் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நீர்நிலைகளை உரியபடி வைத்திருந்தால் தண்ணீர் கிடைக்கிறபோதெல்லாம் போதுமான அளவில் சேர்த்துவைக்கலாம். மிஞ்சும்போது நிலத்தடி நீர் செறிவூட்டலிலும் கவனம் செலுத்தலாம்.

ஏரி நிரம்பினால் உள்ளே முளைத்திருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிடுமே என்ற அக்கறையில் ஏரியையே உடைக்கும் அளவுக்கு மனிதர்களின் போக்கு போயிருக்கிறது. ஒரே நாளில் காலியாகும் ஏரி, ஆண்டுமுழுவதும் வறண்டு நம்மையே திருப்பி சாகடிக்குமே என்ற எண்ணம்கூட அந்த ஈனப்பிறவிகளுக்கு வருவதில்லை அப்படியொரு நிலைவரும்வரை அரசும், அதிகாரிகளும் கைகாட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் கேவலத்தின் உச்சம்தானே.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பு விவரங்கள் நூறுசதவீதம் அரசிடம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான். அப்படி இருந்தால் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை இணையத்தளத்தில் பார்வைக்கு வைக்கலாமே.

வீட்டுக்கருகே உள்ள சிறிய குளத்தின் பரப்பு இரண்டு லட்சம் சதுர அடி என்பது அரசு புள்ளிவிவரப்படி ஒருவனுக்கு தெரியவந்தால், ஆக்கிரமிப்பு தலைதூக்கும்போது அதை எப்படியாவது அம்பலத்திற்கு கொண்டுவரமாட்டானா? சந்தேகப்பட்டுபோய் கேட்டால்,’’ அது பட்டா நிலம், மூடிக்கிட்டு உன் வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இரு’’ என்று வருவாய்துறையின் சில எச்சில் அதிகாரிகளின் அலட்சிய பதிலுக்கு முன்னால் ஆதாரம் கிடைக்காத சாமான்யன் என்ன செய்துவிடமுடியும். இப்படித்தான் கல்வித்தந்தைகள் அனைவரும் புறநகர் பகுதிகளில் ஐந்து ஏக்கர் பட்டா நிலத்தை வாங்கி கமுக்கமாய் பக்கத்திலேயே இருக்கும் அறுபது எழுபது ஏக்கர் என நீர்நிலைகளில் ஆட்டையை போட்டார்கள்.

இப்படி நீர்நிலைகளை கோட்டைவிடுவதால், மழைக்காலங்களில் நீரை சேமிக்க இடம் இருப்பதில்லை..வெள்ளம் வரும்போதோ மொத்தமாய் உடைத்துக்கொண்டு யாருக்குமே பலனில்லாமல் எங்கேயோ போய்விடுகிறது.

மக்கள் தொகை பெருகப்பெருக, உணவு உற்பத்தி வேண்டும். அதற்கு ஆண்டுக்காண்டு நீரின் தேவை கூடுதலாகத்தான் இருக்கும்.  அதை மனதில்வைத்து அவசியம் நீர் நிலைகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆனால் இந்த அடிப்படை அறிவே இல்லாமல் நாளுக்கு நாள் நீர் நிலைகளை சுருங்கவிட்டுக்கொண்டேபோகிறது அரசும் அதனை சார்ந்த அடிமுட்டாள் அதிகாரவர்க்கமும்..இந்த இடத்தில் அலசி ஆராயமால் மேற்கொண்டு எதையும் புதிதாக சாதித்துவிடமுடியாது

மழைக்காலத்தில் சேமிக்க துப்பில்லாமல் தண்ணீரை விரட்டியடிக்க வேண்டியது. கோடைக்காலத்தில் வானத்தை பார்த்து மழையே வா வா என கெஞ்சுவது

கையில் வைத்திருக்கும் நீர் ஆதாரங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்க என்ன செய்யவேண்டும் என்கிற ஒரே விஷயத்தை யோசித்து அதற்கேற்ப சாத்தியப்படும் அத்தனை வழிகளிலும் இறங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை பிரச்சினைகளில் இருந்து காக்கமுடியும்.

துரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் போன்றவை தாராளமாக கிடைக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மாவட்டம் நிர்வாகம், அதன் எல்லைக்குட்பட்ட நீர்நிலைகளின் நிலவரத்தை இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே அடிக்கடி தெரிந்து வைத்துக்கொள்ளமுடியும். ஆக்கிரமிப்புகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கமுடியும்.. ஆனால் இதையெல்லாம் செய்கிறார்களா? செய்யவே மாட்டார்கள்..

ஒரு பெரிய இயற்கை இடர்பாடு வந்து உண்மையிலேயே அதனை சமாளிக்கமுடியாமல் பாதிப்படைந்தால் நிவாரணம் வழங்குவதில் அர்த்தம் இருக்கும். அது எப்போதாவதுதான் இருக்கமுடியும்.

ஆனால் சராசரியான கோடை மற்றும் மழைக்காலத்திற்கே தாக்குப்பிடிக்கமுடியாத அளவிற்கு நாசங்களை செய்துவிட்டு, ஆண்டு தோறும் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணங்களுக்காக விவசாயிகளை போராடவிட்டுக்கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய லூசுத்தனம்…

இந்த லூசுத்தனம் தொடரும் வரை வறட்சி, வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உச்சபட்சமான விவசாயிகள் தற்கொலை போன்றவை முடிவுக்கே வராது..

நிலைமைக்கேற்ப மாற்று சாகுபடி, பாசனத்தில் சிக்கனம், ஊடுபயிர்கள் என நீர்மேலாண்மையுடன் ஏராளமான விஷயங்கள் தொடர்பு கொண்டவை.

நீர் மேலாண்மைக்கான செலவு, சுண்டைக்காய் கால் பணம்.. ஆனால் நிவாரணமாய் கொடுக்கும் சுமைக்கூலி, முக்கால் பணம்.. அவ்வளவே!