ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி

Must read

சென்னை,

மத்திய தேர்தல் துணை கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா நேற்று சென்னை வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசிய பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உமேஷ் சின்ஹா சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷனரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி சில முடிவுகளை உமேஷ் சின்ஹா எடுத்துள்ளார். அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

* தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும், அதுதொடர்பான புகார்களை பெறும் கட்டுப்பாட்டு அறைகள் குறித்தும் அனைவரும் பார்க்கும் படியான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். அதோடு ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கை குறித்தும், அதற்கான தண்டனை குறித்தும் தொகுதி முழுவதும் தனிப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே அந்த தொகுதி முழுவதும் 25 குழுக்கள் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களாக உள்ளன. மேலும் தேவைப்படும் பட்சத்தில் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* 256 வாக்குச்சாவடிகளிலும் ‘வெப் கேஸ்டிங்’ என்ற இணையதள ஒளிபரப்பு செய்யப்படுவதோடு நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.

* தற்போது 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக 2 சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் வரலாற்றில் அதிக அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

* பணப்பதுக்கல் மற்றும் பணப்பட்டுவாடா புகார்களை கவனிப்பதற்காக 12–க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரெயில்நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், டாக்சி மற்றும் ஆட்டோ நிறுத்தங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

* ‘வி.வி.பி.ஏ.டி.’ என்ற யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான எந்திரம் பொருத்தப்படும். அந்தச் சீட்டை யாராலும் எடுக்க முடியாது. யாராவது சந்தேகம் கொண்டால் மட்டுமே அதனை வெளியே எடுக்க முடியும். இதற்காக ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

* வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணம், வருமான வரித்துறை விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் விவரங்கள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்படும்.

* அனைத்து பறக்கும் படையும், அவர்கள் செல்லும் வாகனங்களின் மேல் ஒரு கேமராவும், ஜி.பி.எஸ். கருவியும் வைக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

* இடைத்தேர்தல் முடியும் வரை இரவு ரோந்து பணிக்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழுவை நியமிக்கவேண்டும் என்று உமேஷ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

* தொகுதிக்கு வெளியே பணம் கொடுப்பதாக புகார் வந்தாலும், அங்குசென்று பறக்கும் படை சோதனை செய்யும். இதற்காக 5 பறக்கும் படை குழுக்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு   தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article