“2ஜி வழக்கு புனையப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் வழக்காடிய சி.பி.ஐ. வழக்கறிஞர்கள் பிறகு ஆர்வம் குறைந்து போனார்கள்” என்று நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சரும் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா, தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிந்தது.
இந்த வழக்கை டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி விசாரித்து வந்தார். உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று நீதிபதி ஷைனி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சி.பி.ஐ. தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது” என்று ஷைனி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தீர்ப்பில், “வழக்கு நடந்த ஏழு வருடமும் தினமும்.. விடுமுறை தினங்களில் கூட காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நீதிமன்றத்தில் பொறுமையாக காத்திருந்தேன். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும்படியாக சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படியான ஆவணங்கள் ஏதும் வருமா என காத்திருந்தேன். ஆனால் அப்படி ஏதும் வரவில்லை எவரும் தரவில்லை.
பெரும் குற்றம் நடந்திருக்கிறது என்று பொதுமக்கள் யூகித்துக்கொள்வது போல நீதிமன்றம் செயல்பட முடியாது. இங்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் வேண்டும். அப்படியான ஆவணங்களை சமர்ப்பிக்க அரசுத்தரப்பு தவறிவிட்டது.
இந்த வழக்கு துவங்கியபோது, அரசு தரப்பு அதிகாரிகள் துடிப்புடன் செயல்பட்டார்கள். நாளைடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துடிப்பு குறைந்துகொண்டே போய், கடைசியில் எங்கே போனது என்று தெரியவில்லை.
ஆவணங்களில் உள்ள தங்களுக்கு சாதமான ஓரிருவரிகளையே நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பு சமர்ப்பித்தது. முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
அப்படி சமர்ப்பித்த ஆவணங்களிலும் கீழ் நிலை அதிகாரியான ஆய்வாளர் மனோஜ்குமார்தான் கையெழுத்திட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை அடுத்தடுத்து தொடரும்போது, இந்த ஆவணங்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்திட வேண்டும். ஆனால் அப்படி கையெழுத்திட வில்லை. ஏன் என்று கேட்டபோது அதிகாரிகள் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
அதாவது அந்த ஆவணங்களுக்கு பொறுப்பு ஏற்க சி.பி.ஐ. உயரதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கனிமொழி குற்றவாளி என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் அரசு (சிபிஐ) தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
அவர் , ஆ.ராசாவை சந்தித்தார், பேசினார் என்பதையே சொன்னார்கள். ஒரே கட்சியில் இருக்கும் முக்கிய நபர்கள் சந்தித்து பேசுவதை வைத்து கூட்டுச்சதி செய்தார்கள் என்று சொல்ல முடியாது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் வந்தத விசயத்திலும் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு, அது குறித்த எந்தவித ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த விசயத்தில் கனிமொழி மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க. பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி எந்தவொரு ஆவணங்களை, சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை” என்றும் நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.