சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்சைகள் எழுந்தது.

இந்நிலையில், ஜெ.மரணம் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் ஜெ.மரணம் குறித்து பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜரான நிலையில், இன்றைய விசாரணைக்கு மற்றொரு முன்னாள் தலைமை செயலாளரான ராமமோகன் ராவும் ஆஜரானார்.

இந்நிலையில் இன்று காலை விசாரணைக்கு ஆஜரான ராமமோகன் ராவிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியே வந்த ராமமோகன் ராவ், செய்தியாளர்களிடம் கூறும்போது,  ஜெயலலிதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் என்று கூறினார்.