சென்னை: பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் நிலை மோசமான சிறுமிக்கு தமிழகஅரசு எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, முற்றிலும் குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார். அந்த சிறுமியின் குடும்பத்துக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த சீதாராஜ் – பிரேமா தம்பதியினரின்  இசக்கியம்மாள் (வயது 5) என்ற பெண் குழந்தை,  பக்கத்து வீட்டில் வாசிங் மெஷின் மீது அதனை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரைத் திண்பண்டம் என்று நினைத்துச் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து,  சிறுமியால் உணவு தண்ணீர் சாப்பிட முடியாமல் வயிறு வலி மற்றும் எரிச்சலால் துடித்திருக்கிறார். வேலையிலிருந்து வீடு திரும்பிய அவளது பெற்றோர்கள், அவள் படும் வேதனையைக் கண்டு பதறியபடி சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆரம்ப கட்ட சிகிச்சை செய்த மருத்துவர்கள், பின்னர் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் சிறுமி ஓரளவு குணமடைந்ததாகத் தெரிவித்து, கடந்த மாதம் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும்,  சிறுமியால் கடந்த ஒரு மாதமாக உணவு ஏதும் சாப்பிட முடியாமல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய், உடல் மெலிந்து காணப்பட்டாள்.

இதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த சிறுமியை சென்னை வரவழைத்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தார். மேலும், அவ்வப்போது, குழந்தையின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். இந்த குழந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். சிகிச்சையைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மீண்டு வந்தது. தற்போது சிறுமியின் உடல்நிலை முழுமையாக தேறியதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து, . சிறுமி இசக்கியம்மாள் தனது பெற்றோர் சீதாராஜ் மற்றும் பிரேமா ஆகியோருடன்  தலைமைச் செயலகம் வந்து முதலமைச்சர் ஸ்டாலினை  சந்தித்து  நன்றி தெரிவித்தனர். அப்போது முதல்வர் தமிழகஅரசின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5லட்சம் வழங்கி உதவி செய்தார்.