ஆறாம்திணை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்துல்கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்து வந்து மறைந்ததை பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள் சிலரும் அதை பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, அதைப்பற்றி பலபேரிடம் சொல்லி என்னை கிண்டல் செய்துவந்தார்.
இங்கே சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்யவேண்டும். பின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டு வரவேண்டும்..
எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள்.
இன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.
“அதெல்லாம் இருக்கட்டும். விஞ்ஞான அப்துல்கலாமின் உதவியாளருக்கு பேய் நம்பிக்கையா” என்று ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டார்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்.