சென்னை:
மிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

மேலும், தேர்வு தேதிகள் ஊரடங்கு விலக்கப்பட்டப்பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறியது. இதற்கிடையில், தமிழக அரசு, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அத்துடன் அரியர் தேர்வுக்கு பணம் கட்டியவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளது. இதற்கிடையில் தொற்று பரவல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என சில மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, செமஸ்டர் தேர்வு நிச்சயம் நடத்தப்படும். எப்போது? எந்த முறையில் நடத்துவது? என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆராய ஓரிரு நாளில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.