images (1)
சென்னை: அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவுக்கு நிறைய சென்டிமென்ட்கள் உண்டு.  ஒவ்வொரு காலத்திலும் ஒரு அதிர்ஷ்ட எண்கள், புடவை நிறம், பொட்டு வைக்ககும் விதம்.. இதெல்லாம்கூட மாறிக்கொண்டே இருக்கும்.  அந்த “அம்மா”வின் ஃபாலோயர்களும் அப்படித்தானே இருப்பார்கள்?
இப்போது அவர்கள் ஒரு சென்டிமென்ட்டாக ஒரு விஷயத்தைச் சொல்லி, பயந்தபடி இருக்கிறார்கள்.
அதாவது , அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது கட்சி ஆட்சியை பறிகொடுத்துவிடுமோ என்பதுதான் அந்த சென்டிமென்ட் பயம்.
ஏனென்றால் பொதுத்தேர்தல் நடக்கும் போது சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், ஆளுங்கட்சிக்கு ஆபத்தாம். அப்படித்தான் கடந்த காலங்களில் நடந்திருக்கிறதாம்.
கடந்த, 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சுயேச்சை வேட்பாளர்கள் மரணமடைந்தனர். l;மருங்காபுரி, முசிறி, மதுரை கிழக்குஉள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, 230 தொகுதிகளுக்கு தேர்தல். அப்போது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தோற்று,  திமுக   ஆட்சி அமைத்தது.
அடுத்து வந்த 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, எழும்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இறந்தார்.  அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தோற்றது.  எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நொய்யல் ஆறுபிரச்னை காரணமாக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, 1,450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.
இத்தனை வேட்பாளர்களை போட்டு, ஓட்டுச்சீட்டு அச்சிட முடியாது என்பதால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியை கைப்பற்றியது.
இப்போது அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை இழக்குமோ” என்று பயப்படுகிறார்கள் அ.தி.மு.க. வினர்!
நல்லபடியா ஆட்சி செய்து மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா எந்த சென்டிமென்டும் பாதிக்காது என்று மற்ற கட்சியினர் இவர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.