டெல்லி: எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 12மணி வரை ஒத்தி வைக்கப் பட்டனர். பின்னர் சபை கூடியதும் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும், எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்ட நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021ஐ  மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அப்போது, மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த மசோதாவை மக்களவையில் விவாதிக்கக் கோரினார். ஆனால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர், பண்ணை சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, 2021 நிறைவேற்றப்படுவதற்கு முன், எந்தவொரு விவாதத்தையும் அனுமதிக்க முடியாது, மசோதாவை நிறைவேற்ற உதவுமாறு , எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்களின்  சலசலப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021ஐ  தாக்கல் செய்தார். அங்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். ஆனால், அதை ஏற்க மறுத்த நிலையில்,  சலசலப்புக்கு மத்தியில், பண்ணை சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021 ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்விலேயே இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் திரும்பபெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.