சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் கொண்டுவந்த அக்டோபர் 7-ஆம் தேதியான இன்று  காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  கண்டனம் செய்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக் கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோவை , ஈரோடு , திருப்பூர் மாவட்டத்திற்கும் கேரளாவில் பாலக்காடு , மலப்புரம் மாவட்டத்திற்கும் ஆழியாறு -பரம்பிக்குளம் திட்டம் பெரும் பயன் தருகிறது . 1958 – ம் ஆண்டு ஆழியாறு பரம்பிக்குளம் திட்டம் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே கையெழுத்தானது . இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 50 டி.எம்.சி தண்ணீர் பெறப்படுகிறது . அதில் கேரளாவுக்கு 19.5 டிஎம்சி தமிழ்நாட்டுக்கு 30.5 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது . பரம்பிக்குளம் அணை தமிழக முதல்வராக இருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்டது . இதன் செயல்பாடுகளையும் , பராமரிப்பையும் தமிழக அரசு கவனித்துக்கொள்கிறது . மிகவும் அதிக அளவிலான நீர் தேக்கம் கொண்ட அணைக்கட்டுகளில் இந்தியாவில் முதல் இடத்தையும் , உலக அளவில் முதல் பத்து அணைக்கட்டுகளின் பட்டியலிலும் இத்திட்டம் இடம் பெறுகிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் என அறிவித்த நாளான 07.10.1961 ஆம் நாளை கவனத்தில் கொண்டு , ஆண்டுதோறும் அக்டோபர் 7 ஆம் நாளில் இத்திட்டத்தை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செய்வது சிறப்பானது. அந்த வகையில் இந்த வருடத்தில் 07.10.2022 ஆம் நாளில் இத்திட்டத்தை செயல்படுத்த முக்கிய காரணமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிசாமி கவுண்டர் , பாரத ரத்னா , முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா . மகாலிங்கம் , பத்மபூஷன் டாக்டர் கே.எல் . ராவ் ஆகியோரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது .

இருப்பினும் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட, திறந்து வைக்கப்பட்ட பரம்பிக்குளம் அணையானது , ஆழியாறு – பரம்பிக்குளம் திட்டத்திற்கானது . பெருந்தலைவரும் இத்திட்டத்திற்காக அடித்தளமாக செயல்பட்டவர் என்பதால் அவரது பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து மரியாதை செய்ய வேண்டும். ஆனால் அரசின் அழைப்பிதழில் பெருந்தலைவர் பெயர் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது .

குறிப்பாக தமிழக அரசு , ஆழியாறு – பரம்பிக்குளம் பாசனத் திட்டம் தொடர்பாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பெருந்தலைவர் காமராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து , முன்னிலைப்படுத்த வேண்டும் . காரணம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது மட்டுமல்ல இத்திட்டம் செயல்பட அவர் மேற்கொண்ட முயற்சிகள் விவசாயிகளுக்கும் , பொது மக்களுக்கும் பெரும் பயன் தருகிறது. அவர் போட்ட அடித்தளம் தான் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சி , வருங்கால தமிழகத்தின் உயர்வு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் . எனவே இந்த வருடம் , பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினம் தொடர்பாக அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் காமராஜருக்கும் கட்டாயம் மரியாதை செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.