வேலை செய்பவர்களை அனைவரும் ஒருநாள் ஓய்வு பெறுவது இயல்பு. ஆனால் சிலரது பணி ஓய்வு பெறும் நாள் மட்டும் மிக சிறப்பானதாக கருதப்படுவது உண்டு. காரணம் பணியில் இருக்கும்போது வேலையில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பும், செய்து முடித்த சாதனைகளும் காரணமாகும். அப்படித்தான் பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற 60 வயது சுமத்திரா தேவியின் பணி ஓய்வுபெறும் நாளும் அமைந்தது.

peon_mom

சுமத்திரா தேவி ஜர்கண்ட் மாநிலம் ராம்கர் நகரைச் சேர்ந்தவர். மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமொன்றில் பியூனாக வேலை பார்த்தவர். இவர் செய்த சாதனைதான் என்ன? தனது கடின உழைப்பின் மூலம் தனது மூன்று மகன்களையும் வளர்த்து ஆளாக்கி ஒருவரை ரயில்வே இஞ்சினியராகவும், இன்னொருவரை டாக்டராகவும் அதிலும் ஒருபடி அதிகமான இன்னொரு மகனை ஐ.ஏ.எஸ் முடிக்க வைத்து மாவட்ட கலக்டராகவும் ஆக்கியிருக்கிறார்.
மகன்கள் நல்ல நிலைக்கு வந்த பின்னர் தாயை கவனித்துக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தபோதும் தனது பணியின் மீது உள்ள காதலால் தன் வேலையை ராஜினாமா செய்யாமல் திறம்பட பணியாற்றி முடித்திருக்கிறார் அந்தத்தாய். எனவே அவரது நிறுவனம் அவரது பணி ஓய்வுநாளை விமரிசையாக கொண்டாடியது. உடன் வேலைபார்த்த அனைவரும் அவருக்கு பரிசுகளும் பூச்செண்டுகளும் கொடுத்து நெகிழ்ந்தனர்.
பணி ஓய்வுநாளின் அவரது மூன்று மகன்களும் வந்து பங்கு பெற்று தங்கள் தாய் தங்களை வளர்த்து ஆளாக்கியவிதம் குறித்து தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தங்கள் தாயாரின் கடின உழைப்பையும், தியாகத்தையும் பார்த்த பிறகே சமூகத்துக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு வந்ததாக பீகாரில் கலக்டராக பணிபுரியும் அவரது மகன் மகேந்திர குமார் தெரிவித்தார்.