டில்லி,
மது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த மாதம் 8ந்தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

மத்திய அரசும் புதியதாக வெளியிட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் இன்னும் சகஜமாக புழக்கத்திற்கு வராத நிலையில், இந்த புதிய நோட்டுக்கள் அச்சடிக்க ஆகும் செலவு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான, பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிட்டெட் (BRBNMPL) நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 3.09 ரூபாயும், 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க 3.54 ரூபாய் செலவு செய்யப்படுவதாக ஆர்டிஐ தகவலில் தெரிவித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் 1000 எண்ணிக்கை அச்சடிக்க 3,090 ரூபாய் செலவு ஆவதாகவும், அதேபோல் 2000 ரூபாய் நோட்டுகளை 1000 எண்ணிக்கை அச்சடிக்க 3,540 ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இதற்கான செலவு தொகையை மத்திய வங்கி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புதிய வரிசையின் படி ‘R’ என்ற எழுத்துடன் இரண்டு எண் பேணல்களிலும் அச்சிடப்படுவதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்தும், அச்சடிக்கப்பட்ட வருடமாக 2016 இருக்கும் என்றும் ஆர்பிஐ அறிவிப்பு கூறுகின்றது.
அதேபோல் இனிமேல் அச்சடிக்கப்படும் 50 ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகள் போன்றே மகாத்மா காந்தி (புதிய) வரிசை 2005-ன் படி ‘R’ மற்றும் ‘L’ என்ற எழுத்துடன் இரண்டு எண் பேணல்களிலும் அச்சிடப்படுவதாகவும் கூறியுள்ளது.
கடந்த 20-12-2016 நாள்படி 14 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும், 15.44 லட்சம் கோடியாக, அதாவது 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 14 கோடி வரை மாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.