திண்டுக்கல்:

ச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கூறியிருந்தது. ஆனால், உச்சநீதி மன்றம் அளித்த கெடு முடிய இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், மத்தியஅரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக எம்.பி.க்களும் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிம் பேசிய தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு கூறியதாவது,‘

நீதி மன்ற உத்தரவு  மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில், சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம், விவசாயிகளையும், விவசாயத் தொழிலையும் அழிக்கும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன என்று குற்றம் சாட்டிய அவர்,  தமிழகத்தில் வறட்சியே இல்லை என பொய்யான தகவலையும் பரப்பி வருகின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து, எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வருவதாகவும்,  கடைசியாக  சென்னையில் தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து பேச இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே தலைநகர் டில்லியில் நாங்கள் போராட்டம் நடத்திய போது எங்களை வந்து சந்தித்த முதல்வர், தற்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது ஏமாற்றளிக்கிறது என்று கூறினார்.

விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும்  பிரதமரின் இல்லம் முன் தூக்கு கயிறு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,  விவசாயிகள் பிரச்சினையில்,  அனைத்து மாநில  விவசாயிகளும் ஒன்றிணைந்தால், நதிகள் இணைப்பு, கடன் தள்ளுபடி, விவசாய விளை பொருளுக்கு உரிய விலை என அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.