எந்த வருஷமுமில்லாத அளவுக்கு இந்த வருஷம் ரொம்ப பனி என்று ஒவ்வொரு வருடமும் சொல்லி புலம்பவர்களை பார்த்திருப்போம். வடதுருவத்தில் உள்ள சைபீரியாவில் ஓம்யாகோன் என்ற ஒரு ஊர் இருக்கிறது. உலகத்திலேயே அதிக குளிரான இடம் என்ற பெயரைப்பெற்றது இந்த ஊர்தான்.
இந்த ஊரின் சராசரி வெப்ப நிலை எவ்வளவு தெரியுமா? -58 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். இந்தக் குளிரிலும் இவ்வூரில் 500 பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நியூசிலாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆமோஸ் சேப்பல் என்பவர் இந்த ஊருக்கு சென்று இவ்வூரில் வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று கற்று வந்திருக்கிறார். முதல் நாள் மெல்லிய கால்சட்டையை அணிந்து வெளியே சென்று பார்த்தவர் பனி கால்களை உறைய வைத்துவிட்டதை உணர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்ல அது எச்சிலைக்கூட உறையவைத்துவிடும் பனி என்கிறார். அவரது கேமராவின் லென்ஸ் பனியில் உறைந்துவிட்டதால் அவரால் ஒழுங்காக படமெடுக்கக்கூட இயலவில்லையாம்.
இவ்வூர் மக்களின் பிரதான உணவு இறைச்சியே! நான் சுத்த சைவம் என்பவர்கள் இங்கு வசிக்க முடியாது. இவ்வூரின் சாலைகளை எப்போதும் உறைபனி மூடியே இருக்கும். கார்களைக்கூட நீங்கள் ஹீட்டர் பொருத்தப்பட்ட அறையில்தான் நிறுத்த முடியும். இல்லாவிட்டால் மறுநாள் உங்கள் காரை நீங்கள் பயன்படுத்தவே முடியாது.
கோடை காலங்களில் மட்டும் இங்கு 21 மணிநேரம் வெளிச்சம் இருக்குமாம். வெப்பம் 73 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பிருக்கும் என்கிறார்கள் இவ்வூர்வாசிகள்!
Credit: MailOnline (www.dailymail.co.uk)
And you thought your winters were bad: Welcome to the tiny Russian town of Oymyakon – the coldest inhabited place on earth – where temperatures drop to -58 degrees Fahrenheit