டெல்லி:
புவி சுழற்சியில் ஏற்படும் தாமதம் காரணமாக இன்று ஒரு நொடி தாமதமாகப் புத்தாண்டு பிறக்கிறது.
மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் உலகக் கடிகாரத்தில் செயற்கையாக “லீப்’ நொடி ஒன்றை சேர்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வக இயக்குநர் அஸ்வால் கூறியதாவது:

புவி சுழற்சி என்பது ஒரே சீராக இருக்காது. நிலவின் ஈர்ப்பு விசை, கடல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளைப் பொருத்து புவி சுழற்சி மாறுபடும். இது பூமியின் கால நேரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் இந்த மாற்றம் நமது உலக கடிகாரத்தில் நேர மாற்றத்தை ஏற்படுத்தாது.
அது எப்போதும் போலவே நேரத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும். புவி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் காண்பிக்கும் வானியல் கடிகாரத்தில் தான் இந்த நேர மாற்றம் தென்படும்.
புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று புத்தாண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க இருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில், உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 11 மணி 59-வது நிமிடம், 59-வது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு ‘லீப்’ நொடி சேர்க்கப்படும்.
இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடு செய்யும். உலகக் கடிகாரத்தில் கால அளவியல் விஞ்ஞானிகள் ஒரு ‘லீப்’ நொடியைச் சேர்த்த பின்னர், அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். கடந்த 1972-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 36 ‘லீப்’ நொடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.