சென்னை: மெரினா கடற்கரையில், மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிப்பறை என ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட 160 செண்ட் பரப்பளவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கருணாநிதியின் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 7ந்தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து, 8ம் தேதி அவரது உடல்  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அதன்படி,  சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான தமிழகஅரசு சார்பில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் அனுமதி கோரி  பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சில நிபந்தனைகளுடன் மாநில அளவிலான ஆணையத்திற்கு திட்டத்தை பரிந்துரை செய்திருந்தது. பரிந்துரையை ஏற்ற மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் கருணாநிதி நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிப்பறை என ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட 160 செண்ட் பரப்பரளவில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

வடகிழக்கு பகுதியில் 40 செண்ட் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சுவர், திறந்த வெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதற்கான கூடுதல் தரவுகளை மாநில ஆணையம் பொதுப்பணித்துறையிடம் கோரியுள்ளது. விரைவில் அந்த அனுமதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

கருணாநிதி ஆற்றிய அரும்பணிகள், அவரது வாழ்வின் சிந்தனைகள், சாதனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.