பீஜிங்:

‘டியான்காங்-1’ என்ற சீன விண்வெளி நிலையம் பூமியை நோக்கி   இன்று பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிலை நிறுத்தியது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும்.

இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அப்போது அதன் ஆயுட்காலம் மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துவிட்டு,  செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.

இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று (திங்கட்கிழமை) பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

இது உள்ளூர் நேரப்படி காலை 7.25 மணிக்கு பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அறிவித்துள்ளது

அதே நேரத்தில் பூமியில் எங்கு வந்து விழும், அதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்து இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா வரையில் எங்கு வேண்டுமானாலும் இந்த விண்வெளி நிலையம் வந்து விழக்கூடும். குறிப்பாக, அமெரிக்காவின் மிச்சிகன் லோயர் தீபகற்ப பகுதியில் வந்து விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மிச்சிகன் மாகாணத்தில் அவசர கால குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விண்வெளி நிலையம் நேற்று நண்பகலில், பூமியின் காற்று மண்டலத்திற்கு வெளியே 179 கி.மீ. தொலைவில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த விண்வெளி நிலையம் பூமியில் வந்து விழுவது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, “அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் தரையில் வந்து விழாமல் வழியிலேயே விண்வெளி நிலையத்தின் எரிபொருளுடன் சேர்ந்து எரிந்து விடும். ஆகவே மிகச்சிறிய அளவில்தான் அதன் பாகங்கள் பூமியின் மேற்பரப்பில் வந்து விழும். இதனால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது” என்று குறிப்பிட்டனர்.

எனவே இந்த விண்வெளி நிலையம், இந்தியாவில் வந்து விழும் ஆபத்து எதுவும் இல்லை; அச்சப்படவும் அவசியம் இல்லை என்பது விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.