துமக்குரு:

குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடந்தது. 2 குழந்தைகளுக்கும் தாயானார். 4 ஆண்டுகளிலேயே கணவர் இறந்துபோனார். வீட்டுக்குள் முடங்கவில்லை. தன்னைப் போல் பாதிக்கப்பட்டு தெருவுக்கு வந்துள்ள பெண்களையும் குழந்தைகளையும் மீட்டு அவர்களுக்கு பாதுகாவலராக மாறியிருக்கிறார் 38 வயதான யசோதா.


இது குறித்து யசோதாவே கூறுகிறார்…

13 வயதிலேயே எனக்கு வலுக்கட்டாயமாக உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். என் கணவர் குடிகாரர். எனது 17 வயதிலேயே என் கணவரை இழந்தேன். அந்த அதிர்ச்சியில் வாழ்க்கை நினைத்து மலைத்துப் போய்விட்டேன்.

அதன்பின்னர் பிபிஎம் படித்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இந்த சமுதாயத்துக்கு பங்காற்றிக் கொண்டிருக்கிறேன். கைவிடப்பட்ட 45 பெண்கள் என் பராமரிப்பில் உள்ளனர்.

இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் கைவிடப்பட்ட பெண்களுக்காக 2 காப்பகங்களை நடத்துகின்றேன்.

என் மூத்த மகள் பிலிப்பைன்ஸில் டாக்டருக்கு படிக்கிறார். இளைய மகள் பெங்களூருவில் இன்ஜினியரிங் படிக்கிறார்.

தெருவில் திரியும் பெண்களை அரசு சமூக நலத்துறையும் போலீஸாரும் என்னிடம் ஒப்படைக்கிறார்கள். நான் அவர்களை காப்பகத்தில் வைத்து நன்கு கவனித்துக் கொள்கிறேன். ஆதரவற்ற பெண்களை காப்பதில் ஆத்ம திருப்தி இருக்கிறது. காப்பகம் வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறது. காப்பகம் கட்ட அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் யசோதா.